Header Ads



சீன அரசுக்கு எமது அரசாங்கம் சார்பில் நன்றி - ஹக்கீம்


-டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், அந்த மக்களுக்கு குடிநீரை வழங்குவதில் சீன அரசு ழுழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும்  தம்மை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் லி ஜுன் தலைமையிலான தூதுக்குழுவினரிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் லி ஜுன் தலைமையிலான தூதுக்குழுவினரை வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து பாரிய நகர அபிவிருத்தி மற்றும் வாழைச்சேனை குடிநீர் விநியோகத்திட்டம் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறினார்;.  அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வாழைச்சேனையையும் அதனை அண்டிய கிராமங்களையும் சேர்ந்த மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர். குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக அன்றாடம் அவர்கள் பல மைல் தூரம் செல்லவேண்டியுள்ளது. இதனால் அம் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக சீன அரசு நிதியுதவிகளையும், கடன் வசதிகளையும் வழங்கியுள்ளது. இதற்காக இத்தருணத்தில் சீன அரசுக்கு எமது அரசாங்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 

அத்துடன், எதிர்வரும் காலங்களில் எமது நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய நகர அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது அமைச்சர் ஹக்கீம் சீன தூதுக்குவினருக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கிவைத்தார். 

இக்கலந்துரையாடலில் பதில் சுகாதார அமைச்சர் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், அலிஸாஹிர் மௌலானா, சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான், கட்சியின் வெளிவிவகாரப் பணிப்பாளர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ், உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.