Header Ads



அக்கரைப்பற்றிலிருந்து நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயம் பிரிக்கப்படாது - ஹக்கீம்

-பி.முஹாஜிரீன்-

“நீர்வழங்கல் வடிகாலமைப்புக்குப் பொறுப்பான அமைச்சராக நான் இருக்கும் வரை அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் காரியாலயம் ஒருபோதும் பிரிக்கப்படமாட்டாது எனவும் இடமாற்றப்பட மாட்டாது எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்;” என முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் நஸார் ஹாஜி தெரிவித்தார்.

பாலமுனையில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டையடுத்து கட்சி எதிர்நோக்கியுள்ள சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை (22) மாலை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாக்குறுதியை அளித்ததாக நஸார் ஹாஜி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் துண்டாடப்படுவது தொடர்பில் என்னால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் மு.கா. தலைவருக்கு நான் விளக்கிக் கூறியபோது, இந்நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்திய அவர், இக்காரியாலயம் துண்டாடப்படுவதிலுள்ள விபரீதங்களை புரிந்து கொண்டதுடன் இது பிரிக்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் எமது கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் வழங்கினார்.

இதனையடுத்து அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயம் தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்குமாறும் தலைவர் கேட்டுக் கொண்டார்.  இச்செய்தியை மக்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதுடன் இக்காரியாலயம் பிரிக்கப்படுவதை தடைசெய்த தலைமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்” என அவர் தெரிவித்தார்.

கட்சிக்காக சமூகத்தை விற்காமல் சமூகத்திற்காக கட்சியைப் பயன்படுத்தும் எமது அரசியல் நகர்வுக்கு கிடைத்த இவ்வெற்றியை  முன்மாதிரியாக கொண்டு எமது எதிர்கால அரசியல் ஒழுங்கமைக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இக்காரியாலயம் இடமாற்றப்படுவதை தடுத்து நிறுத்தக் கூறியும் அதற்கு எதிர்ப்பு தெரிவத்தும் கடந்த வெள்ளிக்கிழமை (18) அக்கரைப்பற்றில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.