நான் குற்றவாளி என்றால், தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயார் - றிசாத்
வில்பத்து பிரதேசத்தில் எமது மக்களோ நானோ காடுகளை அழிக்கவில்லை. யானைகளையோ மிருகங்களையோ கொல்லவில்லை. ராவணா பலய அமைப்பின் செயலாளர் என்னைத் தூக்கிலிட வேண்டுமென கருத்து வெளியிட்டுள்ளமை இனவாதத்தின் வெளிப்பாடாகும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வில்பத்து வன பிரதேசத்திலுள்ள காடுகளை அழித்து அங்குள்ள யானைகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும்,
ராவணா பலய அமைப்பின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கையில் வில்பத்து பிரதேசத்தில் எமது மக்கள் வன பிரதேசத்தை அழிக்கவில்லை. அவர்கள் சொந்தமண்ணிலே குடியமர்ந்துள்ளார்கள்.
அது அவர்களது பூர்வீக பூமியாகும். அவர்களோ, நானோ வில்பத்து வனத்துக்குள் பிரவேசித்து மிருகங்களை வேட்டையாட வில்லை. யானைகளை அழிக்கவில்லை. அவ்வாறு எமது மக்களோ, நானோ செயற்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கும்படி சவால் விடுகிறேன். நான் குற்றவாளியாக இருந்தால் தண்டனைகளை ஏற்றுக்கொள்ளத்தயாராக இருக்கிறேன்.
முஸ்லிம்கள் மீது மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்திலிருந்தே பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தற்போதும் முஸ்லிம்கள் தவறு செய்பவர்கள், குற்றவாளிகள் என்றே சித்திரிக்கப்பட்டு வருகிறது.
முஸ்லிம்கள் மனித குலத்தின் மீது மாத்திரமல்ல மிருகங்கள் மீது கருணையுள்ளவர்கள் இதையே இஸ்லாமும் போதிக்கிறது. சில பௌத்த அமைப்புகள் மீண்டும் நாட்டில் இனவாதத்தினை கட்டவிழ்க்கும் செயற்பாடாகவே இதனைப்பார்க்கிறேன்.
வில்பத்துவில் தமது சொந்தக் காணிகளில் குடியேறியுள்ள எமது மக்களை அங்கிருந்து வெளியேற்றி விடும் முயற்சியாகவே இதனை நோக்க வேண்டியிருக்கிறது.
இதனாலே என்மீது பொய்யான கருத்துக்களைப் பரப்பி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். அவர்களது கனவு ஒருபோதும் நனவாகாது என்றார்.
யானைக்குட்டியொன்றினை அனுமதியின்றி வைத்திருந்தார் என்பதற்காக தம்மாலோக தேரரை கைது செய்து விளக்கமறியலில் வைக்க முடியுமென்றால் ஆயிரக்கணக்கான யானைகள் வாழும் வில்பத்து வன பிரதேசத்தை அழித்துவரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனை தூக்கிலிட வேண்டும் என ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
-ARA.Fareel-
Post a Comment