Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு அதிகரிப்பு, வரவேற்பை பெரும் பாப்பரசரின் செய்கை (வீடியோ)


‘நாம் வேறுபட்ட பண்பாடுகள், மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆனால் நாம் சகோதரர்கள், நாம் அமைதியாக வாழ விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார் போப் பிரான்சிஸ்.

முஸ்லிம், கிறித்துவ, இந்து அகதிகள் கால்களைக் கழுவி முத்தமிட்ட போப், நாம் அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள் என்றார். பிரஸல்ஸ் தாக்குதல்களுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதையடுத்து போப்பின் இந்தச் சகோதரத்துவ செய்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோமுக்கு வெளியே கேசில்நுவோ டி போர்ட்டோவில் புகலிடம் நாடி வந்தவர்களிடத்தில் பேசிய போப், பிரஸல்ஸ் தாக்குதலை ‘போர்ச் செய்கை’ அல்ல என்று மறுத்தார். 

புனித வெள்ளியை முன்னிட்டு அகதிகள் கால்களை போப் கழுவியது, ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக அபோஸ்தலர்கள் கால்களை சேவையின் செய்கையாக கழுவியதன் மறுசெயலாக்கமாக கருதப்படுகிறது. அதாவது பிரஸல்ஸ் தாக்குதல் ‘அழிவின் செய்கை’ என்பதற்கு மாற்றாக புலம்பெயர்ந்தோர் கால்களைக் கழுவியதன் மூலம் சகோதரத்துவத்தை உணர்த்தும் மாற்றுச் செயலாக கருதப்படுகிறது. 

அவர்களின் கால்களைக் கழுவ போப் மண்டியிட்டபோது அகதிகளில் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். புனித நீரால் அவர்களது கால்களைக் கழுவி சுத்தம் செய்த போப் கால்களை முத்தமிட்டார். இந்த நிகழ்ச்சியில் 4 பெண்களும் 8 ஆண்களும் கலந்து கொண்டனர். ஆண்களில் நைஜீரியாவிலிருந்து 4 கத்தோலிக்கர்களும், மாலி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 முஸ்லிம்களும் இந்தியாவிலிருந்து சென்ற ஒரு இந்துவும் அடங்குவர். 

சிறப்பு வழிபாடு நடைபெற்றவுடன் ஒவ்வொரு அகதியையும் போப் வாழ்த்தினார், செல்பிக்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன. 

பொதுவாக கால்கள் கழுவும் புனிதச் சடங்கில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். பாதிரியார்கள் பலர் மரபு ரீதியாக 12 கத்தோலிக்க ஆண்களுக்கே இந்த சடங்கை நிகழ்த்துவர். 

ஆனால் போப், தான் பதவியேற்ற 2013-ம் ஆண்டில், சில வாரங்களிலேயே கத்தோலிக்கர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக சிறார் முகாமுக்குச் சென்று அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதே புனிதச் சடங்கை செய்தார். 

தற்போது முஸ்லிம் அகதிகள், பெண்கள், இந்து என்று அவரது சடங்கு புதிய பரிமாணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   https://www.youtube.com/watch?v=pVjHt13RJ9A

No comments

Powered by Blogger.