Header Ads



சரத் பொன்சேகா தெரிவித்த, சில முக்கிய விடயங்கள்

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த சில முக்கிய விடயங்கள்.

நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒருவன். எனது பெற்றோர் ஆசிரியர்கள். நான் இராணுவத்தில் இணைந்ததன் பின்னர் பதவி நிலைகளை பெற முயற்சித்திருக்கவில்லை. படிப்படியாக உயர்வு பெற்று சென்றதுடன், இராணுத்தின் நற்பெயரையும் பாதுகாக்க செயற்பட்டிருந்தேன். இராணுவத்தில் ஒரு கட்டத்தில் கஷ்ட காலம் இருந்தது. அந்த காலத்தில் இராணுவத்தை விட்டு தப்பிச் சென்று அமெரிக்கா போன்ற சுகபோக நாட்டில் வாழ்ந்து சம்பாதித்துவிட்டு யுத்தம் முடிந்ததும் ஆசையில் அந்த கௌரவத்தை பறித்துக் கொள்வதற்காக அலைந்து திரியவுமில்லை. இராணுவத்தின் கௌரவத்தை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தோம். 

அதன் விளைவாக எமக்கு பதவியுயர்வுகள் கிடைத்தன. அந்த பதவியுயர்வுகளின் அடிப்படையில் நிலையொன்று கிடைத்தது.  எனினும், எனது இராணுவத் தளபதி பதவி மற்றும் நான் அந்த பதவிக்கு வந்த முறை தொடர்பாக கடந்த காலங்களில் முன்னைய ஆட்சியாளரும் முன்னாள் பாதுகாப்பு ச்செயலாளரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். இருந்தபோதிலும் நான் அந்தப் பதவிக்கு மிகவும் நேர்மையான வழியிலேயே வந்திருந்தேன். அதைவிடுத்து ராஜபக்ஷ குடும்பத்தின் புண்ணியத்திலோ அல்லது அவர்களது தேவைகளுக்காகவோ அந்த பதவிக்கு நான் வந்திருக்கவில்லை.  

இதேநேரம், நான் ஓய்வுபெற இருந்த அதிகாரி என்றும் இருந்தபோதிலும் எனக்கு இராணுவத் தளபதி பதவியை வழங்கியிருந்ததாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டிருந்தார். அது முழுமையான பொய். ஹன்சார்ட் அறிக்கையில் அது உள்வாங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இதை நான் கூறுகிறேன். நான் இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருந்தபோது நான் ஓய்வுபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் என்னை அழைத்துப் பேசிய அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, எனக்கு அடுத்ததாக இராணுவத் தளபதி பதவி கிடைக்கும் என்றும் ஓய்வுபெறும் வயது 58 ஆக அதிகரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.  

ஆகவே, எனக்கு முன்பிருந்த இராணுவத் தளபதி ஓய்வுபெறும் போது எனக்கு ஐம்பத்து ஆறரை வயதாக இருந்தது. இராணுவ தளபதி பதவியில் எனக்கு 3 வருடங்கள் இருக்க முடியும் என்று சந்திரிகா குமாரதுங்க என்னிடம் கூறியிருந்தார். ஆகவே, எனக்கு 60 வயதாவதற்கு முன்னதாக என்னால் இராணுவத்தில் 3 வருடங்கள் இருக்கக்கூடிய சூழலிலேயே நான் இருந்தேன். ஆகவே, 2005 ஆம் ஆண்டு நான் இராணுவத் தளபதி பதவிக்கு நியமிக்கப்பட்டபோது நான் ஓய்வு பெறுவதற்கு 3 வருடங்கள் இருந்தன. அந்த நிலையில் தான் நான் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டேன். 

இராணுவத் தளபதியானதும் மிகவும் சாதாரணமான எதிர்பார்ப்பே என்னிடம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதன் நிமித்தம் சூழ்ச்சி செய்யும் நோக்கம் இருந்திருக்கவில்லை. எனினும், அப்போதிருந்த நாட்டின் ஆட்சியாளர்கள், அவர்களது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினர் எமது ஜாதகங்களை திருடிச் சென்று ஜோதிடம் பார்ப்பார்கள். அந்த ஜாதகம் சிறப்பானதாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுடன் குரோதங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சூழ்ச்சி செய்வதாகவும் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பார்கள் என்றும் நினைத்துக் கொள்வார்கள். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பழிவாங்க செயற்படுவார்கள்.  சாதாரண எதிர்பார்ப்பே எனக்கு எதிர்பார்ப்பொன்று தான் இருந்தது. 

பொதுவாக எந்தவொரு இராணுவத் தளபதியிடமும் அந்த அப்பாவியான எதிர்பார்ப்பு இருக்கும் என்றே நான் கருதுகிறேன். இராணுவத் தளபதியொருவருக்கு இந்த நாட்டின் சார்பான தூதுவராக பதவி வகிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. சில இராணுவத் தளபதிகளுக்கு பாதுகாப்புச் செயலாளராக பதவி வகிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அவ்வாறான எதிர்பார்ப்பு தான் எனக்கும் இருந்தது. அதற்கு அப்பால் செல்ல எமக்கு எதிர்பார்ப்பு இருந்திருக்கவில்லை.  எனினும், இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரதானிகளின் நடத்தைகள் காரணமாக அவற்றுக்கு முகம்கொடுக்கையில் அதற்கு அப்பாலான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்பட்டிருந்தது.  

2009 ஆம் ஆண்டில் நாம் யுத்தத்தை நிறைவு செய்தோம். நாம் யுத்தத்தை செய்யும் காலத்தில் யுத்தத்துக்கு மேலதிக பணம் செலவாகவில்லை. நான் 2005 ஆம் ஆண்டில் இராணுவத்தை பொறுப்பேற்கும் போது இராணுவத்தின் செலவினங்களுக்காக வருடமொன்றுக்கு 82 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. நான் 3 வருடங்களும் 7 மாதங்களும் இராணுவத் தளபதியாக செயற்பட்டிருந்தேன். ஒரு இலட்சத்து 16 ஆயிரமாக இருந்த இராணுவத்தின் எண்ணிக்கையை நான் 2 இலட்சமாக அதிகரித்தேன். அப்போதும் எனக்கு 82 மில்லியன் ரூபா தான் கிடைத்தது. எனினும், இராணுவத்தை பராமரிப்பதற்காக நான் மேலதிகமாக பணம் கேட்டிருக்கவில்லை. 

இதேநேரம், அதற்கு முன்னரும் நான் யுத்தத்துக்கு கட்டளையிட்ட சந்தர்ப்பத்திலும் யுத்தத்துக்கான ஆயுதங்களை வாங்கும் நடவடிக்கைகள் இந்த 82 பில்லியனுக்கு வெளியிலேயே நடைபெற்றன. அது சீனாவில் இருந்த நடைபெற்றிருந்தது. நான் யுத்தம் செய்தபோது வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான கட்டணங்கள் 2012 ஆம் ஆண்டிலேயே செலுத்த ஆரம்பிக்கப்பட்டன. அவை 2020 வரை செலுத்தப்படும்.  இவ்வாறான நிலையில், மேற்படி காலப்பகுதியில் நாட்டில் யுத்தம் நடைபெறுவதாகவும் நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் நாட்டின் ஆட்சியாளரும் பாதுகாப்புப் பிரதானிகளும் நாட்டு மக்களுக்கு கூறியிருந்தனர். அது முற்றிலும் பொய்யான விடயமாகும். 

யுத்தத்துக்கு அவ்வளவு பணம் செலவாகியிருக்கவில்லை. யுத்தத்துக்கான செலவுகள் 2012 ஆம் ஆண்டிலிருந்தே செலுத்த ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு யுத்தத்தை காட்டி மக்களை ஏமாற்றி யுத்தத்துக்கென கூறி அந்த பணத்தை அப்போதைய ஆட்சியாளர்கள் கொள்ளையடித்திருந்தனர்.  உதாரணமாக 130 மில்லிமீற்றர் தோட்டாக்களை குறிப்பிட முடியும். அவற்றை நாம் கப்பல் கணக்கிலேயே கொண்டு வருவோம். யுத்தம் ஆரம்பிக்கும் போது அந்த தோட்டாவொன்றின் விலை 250 டொலராக காணப்பட்டது. 15 வருடங்களில் அதன் விலை 50 டொலரினால் மட்டுமே அதிகரித்திருந்தது. யுத்தம் நடைபெற்ற காலத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் அந்த தோட்டாவொன்றுக்கு 650 டொலர் கணக்கில் செலுத்த ஆரம்பித்திருந்தார். இது 400 டொலர் அதிகமாகும். இவ்வாறு செலவிட்டு இறுதியில் எனக்கு தோட்டா வாங்குவதற்கு நிதி இல்லாமல் போய்விட்டது. தோட்க்கள் இல்லாமல் என்னால் 4 மாதங்கள் யுத்தம் செய்ய முடியாமல் போய்விட்டது. 2008 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எம்மிடம் போதிய தோட்டாக்கள் இல்லாமையினால் நாளொன்றுக்கு ஒரு மல்டி பரல் தாக்குதலை தான் மேற்கொண்டிருந்தோம். 

அதன் பின்னர் நான் பாகிஸ்தான் இராணுவத் தளபதியிடம் தனிப்பட்ட ரீதியில் பேசி 60 மில்லியன் டொலர் பெறுமதியான தோட்டாக்களை தருவித்தேன். பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்புச் செயலாளரும் ஒன்றும் செய்யாமல் மேலே பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், பசில் ராஜபக்ஷவுடனும் பேசி 60 மில்லியன் டொலரை பெற்று பாகிஸ்தான் இராணுவத் தளபதியுடன் எனக்கிருந்த நட்பை பயன்படுத்தித்தான் தோட்டாக்களை வரவழைத்து போதிய ஆயுதங்கள் இல்லாத ஆறு மாதகால யுத்தத்தை நாம் நடத்தியிருந்தோம். அந்தவகையில் தற்போது யுத்தவெற்றிக்கான கௌரவத்தை உரிமை கோருபவர்களுக்கு இந்த விடயங்களெல்லாம் மறந்து போய்விட்டன. 

No comments

Powered by Blogger.