பெற்ற தாயின் வேலையை பிடுங்கிய, பிரதமர் டேவிட் கமெரூன்
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் கமெரூனின் தாயான மேரி கமெரூன் Oxfordshire நகரத்தில் உள்ள Chieveley மற்றும் Area என்ற இரு குழந்தைகள் மையத்தில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் கமெரூன் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
’நகரங்களில் உள்ள நிர்வாக கவுன்சில்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 2020ம் ஆண்டில் இருந்து தற்போது அளிக்கப்படும் நிதியை விட 24 சதவிகிதம் குறைவாக அளிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த கவுன்சில் கீழ் வரும் சில குழந்தைகள் மையத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறியிருந்தார்.
கமெரூன் கூறிய குழந்தைகள் மையத்தில் தான் அவரது தாயாரான மேரி கமெரூனும் பணியாற்றி வந்துள்ளார்.
தனது மகனான பிரதமரின் அறிவிப்பால் அதிருப்தி அடைந்த மேரி கமெரூன் இந்த திட்டத்தை கைவிடுமாறு கவுன்சிலுக்கு மனுவும் அனுப்பியிருந்தார்.
ஆனால், பிரதமரின் அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, குழந்தைகள் மையம் மூடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தற்போது மேரி கமெரூன் தனது பணியை இழந்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகை ஒன்றிற்கு மேரி கமெரூன் பேட்டி அளித்தபோது, ‘குழந்தைகள் மையம் மூடப்படுவது எனக்கு கவலை அளிக்கிறது.
ஆனால், நிதி பற்றாக்குறை இருக்கும் நேரத்தில் இதுபோன்ற முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என பதிலளித்துள்ளார்.
குழந்தைகள் மையம் மூடப்படுவது குறித்து தனது மகனான கமெரூனிடம் நேரடியாக புகார் கூறினீர்களா என்ற கேள்விக்கு ‘மகனாக இருந்தாலும், பிரதமரின் பணியில் நான் தலையிட மாட்டேன்’ என மேரி கமெரூன் தெரிவித்துள்ளார்.
Post a Comment