சில சுவையூட்டிகளை, தடைசெய்ய நடவடிக்கை
சிறுநீரக நோயை கட்டுப்படுத்த விரைவாக வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வது அவசியம் என்பதால், நாட்டில் சிறுநீரக நோய் தொடர்பில் அறிக்கையை பெற்றுத் தருமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் முன்னேற்றம் குறித்த கூட்டம் நாரஹேன்பிட்டவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது ஒரு வருடத்தில் 5000 சிறுநீரக நோயாளர்கள் வரை பதிவாவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், விவசாய உற்பத்திகளுக்காக விஷ இரசாயனங்களைப் பயன்படுத்துதல், நீரழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றன சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமாக அமைவதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
தற்போது மக்களின் உணவுகளில் விஷ இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றமை பிரதான பல நோய்களுக்கு காரணம் எனவும், இது குறித்து மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகள் குறித்து, சுகாதார அமைச்சின் முன்னேற்றம் குறித்த கூட்டத்தில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உணவில் பயன்படுத்தப்படும் சில சுவையூட்டிகளையும் எதிர்காலத்தில் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு இதன்போது கூறியுள்ளது.
அத்துடன் மருந்து உற்பத்தி மற்றும் டெங்கு நோய் குறித்தும் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
Post a Comment