ஈரானுக்கு நிதானம் தேவை - பான் கிமூன்
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்த வாரம் இரண்டு முறை ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்ட ஈரான், அதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபான் துஜாரிக் மூலம் பான் கி-மூன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டு, அதன் மூலம் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த இணக்கமான சூழலைக் கெடுக்காமல், நிதானமாகவும், எச்சரிக்கையுடனும், புத்திசாலித்தனமாகவும் ஈரான் நடந்து கொள்ள வேண்டும்.
ஏவுகணைப் பரிசோதனைகள் போன்ற செயல்களில் ஈடுபட்டு, வல்லரசு நாடுகளுடனான பதற்றத்தை ஈரான் அதிகரித்துக் கொள்ளக் கூடாது என்று பான் கி-மூன் அறிவுறுத்தினார்.
கடந்த ஜூலை மாதம் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தில், தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காக அல்ல என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டதையடுத்து, அந்நாட்டின் மீதான விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.
இந்தச் சூழலில், குறுகிய, நீண்ட தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளைப் பரிசோதித்ததாக ஈரான் அரசு ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
அதனைத் தொடர்ந்து, 1,400 கி.மீ. தொலைவு சென்று தாக்கும் காதர்-ஹெச் மற்றும் காரத்-எஃப் ஏவுகணைகளை ஈரான் புதன்கிழமை பரிசோதித்தது.
Post a Comment