அமெரிக்கப் போர்க்கப்பல்கள், இனி அடுத்தடுத்து இலங்கைக்கு வரும்
சிறிலங்காவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தல்களில் வாக்களித்த வாக்காளர்களின் முடிவை அமெரிக்கா மதிப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்.
கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள அமெரிக்க கடற்படையின் யுஸ்எஸ்எஸ் புளூ ரிட்ஜ் கட்டளைக் கப்பலில், நேற்று அளிக்கப்பட்ட வரவேற்புபசார நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“தமது நாடு நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, வளம்மிக்கதாக இருக்க வேண்டும் என்ற சிறிலங்கா மக்களின் பார்வையை அமெரிக்கா மதிக்கிறது. முழு இந்தோ- பசுபிக் பிராந்தியத்தின் உறுதிப்பாட்டுக்கும், செழிப்புக்கும் சுதந்திரமான ஜனநாயகம் முக்கியமான தூணாக இருக்க முடியும்.
நாங்கள் சிறிலங்கா மக்களின் பார்வையை மதிக்கிறோம். 41 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஆண்டு மே மாதம் சிறிலங்கா வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா மக்களினதும், வாக்காளர்களினதும் கண்ணோட்டத்துக்கு ஆதரவாக இருப்போம் என்று கூறியிருந்தார்.
இந்தக் கப்பலின் வருகை மூலம், புத்தாயிரமாண்டு சவால் கூட்டுத் தாபனம் மூலம், பல அமெரிக்க மூத்த அதிகாரிகளின் வருகைகளின் மூலம், அதனை நாம் செய்கிறோம்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றின் முதல் வருகை இது. இன்னும் பலவற்றின் வருகைக்கான முதல் பயணமாக இது இருக்கும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு யுஸ்எஸ்எஸ் புளூ ரிட்ஜ் கப்பலில் அளிக்கப்பட்ட விருந்துபசாரம் மற்றும் இசை நிகழ்ச்சியில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர, சபாநாயகர் கரு ஜெயசூரிய, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள், இராஜதந்திரிகள், முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Post a Comment