ஷரீஆ வங்கிக்கு எதிராக ஜனாதிபதியிடமிருந்து, சாதக பதிலை எதிர்பார்க்கும் பொதுபல சேனா
நாட்டின் கல்வி முறையில் முஸ்லிம் பாடசாலைகள், சிங்கள பாடசாலைகள் என வேறுபடுத்தப்பட்டிருப்பதினாலேயே முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்குமிடையில் நல்லிணக்கம் ஏற்படாதிருக்கிறது.
இதேபோன்று வங்கி முறையிலும் முஸ்லிம்களுக்கென்று தனியாக ஷரீஆ வங்கி முறைமை உள்ளமை நல்லிணக்கத்துக்கு ஆபத்தானதாகும் என பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பு நாட்டில் ஷரீஆ வங்கி முறைமையை எதிர்ப்பதற்கான காரணங்களை விளக்குகையிலே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் விளக்கமளிக்கையில்,
நாட்டில் நல்லிணக்கம் சக வாழ்வு உருவாக வேண்டும் என்றே பொதுபலசேனா அமைப்பு விரும்புகிறது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்பட நல்லிணக்கத்துக்கு பாதகமானவைகள் களையப்பட வேண்டும். இதனடிப்படையிலே நாம் ஷரீஆ வங்கி முறையைத் தடைசெய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளோம். இலங்கையில் ஷரீஆ வங்கி முறை சட்டரீதியானதாக இருக்கலாம். மத்திய வங்கியும் அனுமதி வழங்கியிருக்கலாம் என்றாலும் அவ் வங்கி முறை இனநல்லிணக்கத்துக்குப் பாதகமென்றால் தடைசெய்யப்பட வேண்டும்.
முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் ஷரீஆ வங்கி முறைமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாக அறிகிறோம். இதனை நாம் எதிர்க்கவில்லை. அவர்கள் தமது சமூகத்துக்காக ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளார்கள். ஆனால் எமது சிங்கள அரசியல் வாதிகள் சிங்களவர்கள் தொடர்பில் அக்கறையில்லாமல் இருப்பது குறித்து நாம் கவலையடைகிறோம்.
ஷரீஆ வங்கி முறைக்கு எதிராக நாம் ஜனாதிபதியிடம் செய்துள்ள முறைப்பாடு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்பது தொடர்பில் விழிப்பாக இருக்கிறோம் என்றார்.
- ARA.Fareel-
Post a Comment