தேசிய ரீதியாக உருவாக வேண்டிய சிவில் சமூக கட்டமைப்பு
(விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிவாசல்களின் சம்மேளனங்கள் மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து 'கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனம்' எனும் பெயரில் புதிய அமைப்பு ஒன்றினை சில தினங்களுக்கு முன்னர் தோற்றுவித்துள்ளன.
அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மேற்குறித்த சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து பணியாற்றியதன் அடிப்படையிலும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் வகையிலான பலமான குரல் ஒன்றைக் கட்டியெழுப்பும் நோக்கிலுமே இவ்வாறானதொரு மாகாண மட்ட சிவில் சமூக நிறுவனம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு அமைப்பின் அவசியம் குறித்தும் குறிப்பாக முஸ்லிம் சிவில் சமூகம் பலப்பட வேண்டியதன் தேவைப்பாடு குறித்தும் நாம் கடந்த பல வருடங்களாக வலியுறுத்தி வந்துள்ளோம். அந்த வகையில் கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்புகளின் சம்மேளனத்தின் உதயம் வரவேற்கத்தக்கதாகும்.
அதேபோன்றுதான் கிழக்கு மாகாணத்திற்கு வெ ளியில் வாழும் முஸ்லிம் மக்களும் தம்மை சிவில் அமைப்புகள் ரீதியாக பலப்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
கிழக்கிற்கு வெளியில் ஏராளமான முஸ்லிம் சிவில் அமைப்புகள் பணியாற்றுகின்ற போதிலும் அவற்றுக்கிடையிலான வலையமைப்புகள் இல்லை. குறித்த அமைப்புகள் சமூக விவகாரங்களில் ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றுவதும் குறைவாகும்.
எனவேதான் கிழக்கு மாகாணத்தை முன்மாதிரியாகக் கொண்டு மாவட்ட ரீதியான பள்ளிவாசல்கள் சம்மேளனங்களோ அல்லது மஜ்லிஸ் அஷ்ஷூராக்களோ உருவாக்கப்பட வேண்டும்.
இவற்றில் பிரதேசங்களின் பள்ளிவாசல்களது நிருவாகிகளும் பொது நிறுவனங்களின் பிரதிநிதிகளும் புத்திஜீவிகளும் உள்ளீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மாவட்ட ரீதியாக உருவாக்கப்படும் சம்மேளனங்கள் பின்னர் தம்மை மாகாண சம்மேளனங்களாக கூட்டிணைத்துக் கொள்ள முடியும்.
அதன்பிற்பாடு எல்லா மாவட்ட சம்மேளனங்களும் இணைந்தோ அல்லது மாகாண சம்மேளனங்கள் இணைந்தோ தமக்கிடையில் தேசிய ரீதியான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முடியும்.
இவ்வாறானதொரு தேசிய சிவில் சக்தி உருவாக்கப்படுமாயின் அதுவே ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களினதும் அங்கீகாரம் பெற்ற சிவில் சமூக நிறுவனமாக மாற்றம் பெற முடியும்.
இன்று இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல தேசிய நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்ற போதிலும் அவற்றின் செயற்பாடுகள் ஒரு சில பகுதிகளுடன் வரையறுக்கப்பட்டதாகவே அமைந்துள்ளன.
அதிலும் குறிப்பாக அரசியல் மற்றும் உரிமைகள் சார்ந்த பகுதிகளில் இவற்றின் ஈடுபாடு மிகக் குறைவானதாகவே அமைந்துள்ளன.
அண்மையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஹுசைன் இலங்கைக்கு வருகை தந்த சமயம் அவரை இலங்கை முஸ்லிம்கள் சார்பில் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அல்லது அவரைச் சந்திப்பதற்கு முஸ்லிம் அரசியல் கட்சிகளோ சிவில் அமைப்புகளோ முயற்சிக்கவில்லை.
அதேபோன்றுதான் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தருகின்ற போதிலும் முஸ்லிம் சமூகம் சார்பில் யாரைச் சந்தித்துப் பேசுவது எனத் தீர்மானிப்பதில் அவர்கள் தடுமாற்றங்களை எதிர்கொள்கின்றனர். இதுவும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேசமயப்படாமைக்கு பிரதான காரணமாகும்.
எனவேதான் தேசிய முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கும் வகையிலும் ஓர் அமுக்கக் குழுவாக செயற்படும் வகையிலும் மாவட்ட மற்றும் மாகாண மட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனங்களை ஒன்றிணைத்த தேசிய சிவில் சமூக கட்டமைப்பு ஒன்று தாபிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள சகல சிவில் அமைப்புகளும் சிந்திக்க வேண்டும்.
அதற்கான சிறந்த மாதிரியாக கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் முன்னகர்வுகளை கொள்ள முடியும். இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்.
Post a Comment