Header Ads



"அடுத்து சில நாட்களில், என்ன நடக்கபோகிறது என்று பாருங்கள்" - சந்திரிக்கா

கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிஸ்தர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் நேற்று -19- உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு கோஷ்டி தற்போது அங்குமிங்கும் ஓடித் திரிகின்றது. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் அங்கு இருக்கின்றார். அங்கு இருப்பவர்கள் அனைவரும் திருடர்கள்.

கொலையாளிகளும் உள்ளனர். எமது அரசாங்கம் தற்போது வழங்கியுள்ள ஊடக சுதந்திரம் காரணமாக அவர்களின் கூட்டங்கள் குறித்து போதுமான அளவு செய்திகளை வெளியிடுகின்றனர்.

கொழும்புக்கு சுமார் 12 ஆயிரம் பேரை வரவழைக்கப்பட்டிருந்தனர். எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எதிரில் தான் பொலிஸார் கூட்டத்திற்கு வந்த வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கியிருந்தனர்.

அங்கு 250 முதல் 300 பஸ்கள் உட்பட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். மிகவும் நீளமான பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நான் வாழ்க்கையில் அப்படி நீளமான பஸ்களை பார்த்ததில்லை.

பஸ்ஸில் ஏறுவதற்கு வந்த அனைவரும் கையில் சாராய போத்தல்களை வைத்திருந்தனர். அவர்கள் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்தனர். காலை, மதியம், இரவு உணவுகளை வழங்கி இவர்கள் ஆட்களை அழைத்து வந்துள்ளனர்.

எமக்கு அப்படி செய்து, இவர்களை விட மூன்று மடங்கு மக்களை அழைத்து வர முடியும். எனினும் நாங்கள் அதற்கு தயாரில்லை. கூட்டங்கள் நடத்த முடியும், ஆனால் அதில் கட்சியின் முக்கிஸ்தர்கள், கட்சியினர் செல்வார்களாயின் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அடுத்து சில நாட்களில் பாருங்கள் அவர்களுக்கு என்ன நடக்க போகிறது என்று.

நன்றாக சாப்பிடும் ஒருவருக்கு ஒரு வாரம் சாப்பாடு கொடுக்காவிட்டால் என்ன நடக்கும். பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்வார். கிடைக்கும் எதனையும் சாப்பிடுவார். பொய் சொல்லி திருடி சாப்பிடுவார். இவர்கள் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர் என்றார்.

No comments

Powered by Blogger.