Header Ads



நீரின் தரத்தைப் பேணுவதற்கும், உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை - ஹக்கீம்

-எம்.எம்.எம்.றம்ஸீன்-

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களிலும்,  இறக்குமதி செய்யப்படும் பொருட்களிலும் அவற்றை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நீரின் அளவைக் காட்டும் சுட்டியை பொருட்களின் பொதியிடலில் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப்  ஹக்கீம் தெரிவித்தார்.

உலக நீர் தினத்தை முன்னிட்டு கண்டி பல்லேகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற மாவட்ட மட்ட மகாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உலக நீர் தினத்;தை முன்னிட்டு வருடந்தோறும் கருப்பொருள் ஒன்றை  முன்வைத்து மாநாடுகளை நடாத்தி, விருதுகளை வழங்குவதில் மட்டும் பயனில்லை. நாட்டு மக்;கள் நீர் வளத்தின் அவசியத்தையும் அதனை சிக்கனத்தன்மையுடன் பாவிக்கும் மனப்பாங்கையும் ஏற்படுத்திக் கொள்ளும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.

இதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன். இதன் மூலம் பொருட்களின் உற்பத்திக்கு பாவித்த நீரின் அளவை மட்டுமன்றி பொருள் உற்பத்தியினால் மாசடைந்த நீர் மற்றும் அது மீள் சுத்திகரிக்கப்பட்ட அளவையும் நுகர்வோர் அறிந்து கொள்ள முடியும். இந்த சுட்டியை பொருளில் பயன்படுத்துவதை ஆரம்பத்தில் சட்டரீதியாக கட்டாயப்படுத்தப்படமாட்டாது. ஆனால், எதிர்காலத்தில் சட்டரீதியில் கட்டாயப்படுத்தப்படும்.

உலகில் சுத்தமற்ற நீரை உபயோகிப்பதால் மட்டுமன்றி, குடிநீர் தட்டுப்பாடு காரணமாகவும் மனிதர்கள் மரணத்தைத் தழுவுகின்றனர். எனவே, கிடைக்ககூடிய நீரின் தரத்தைப் பேணுவதற்கும், உறுதிப்படுத்துவதற்கும்; நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 கண்டி மாவட்டத்தில் இரண்டு பாரிய குடிநீர் விநியோகத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவை கண்டி தெற்கு மற்றும் குண்டசாலை - ஹாரகம குடிநீர் விநியோகத் திட்டங்கள் என்பனவாகும். இதற்கு 50 ஆயிரம் மில்லியன் ரூபா செலவாகுமென மதிப்படப்பட்டுள்ளது.

கண்டிய மாவட்டத்தில் பல்லேகலை பிரதேசம் மிகவும் துரிதமாக அபிவிருத்தி கண்டு வருகின்றது. மாகாணசபை, சிறைச்சாலை என்பன மட்டுமன்றி அரச நிறுவனங்கள் பலவும் பல்லேகலையில் இயங்கி வருகின்றன. அத்துடன் அங்கு விமான நிலையமொன்றும் அமைக்கப்பவுள்ளது.  எனவே, பல்லேகலை பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவை விரைவில் நிறைவு செய்ய வேண்டும்.   கண்டி மாவட்ட குடிநீர் விநியோகத் திட்டடங்களை முன்னெடுக்க விரைவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா செல்லும் போது சீனாவுடன்  பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன், வடக்கில் கிளிநொச்சி உட்பட நாட்டில் ஏழு மாவட்டங்களில் பாரிய குடிநீர் விநியோகத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.

1 comment:

  1. ஆமாம், நீர் அங்கே சென்றால் கிழக்கு மாகாணத்தை மறந்துவிடும் !!

    ReplyDelete

Powered by Blogger.