"சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது, ஆபத்தின் அறிகுறி"
சிறுநீர்... பெயர்தான் சிறியது. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் சிறு குறை ஏற்பட்டாலோ, உடனடியாக நிறம் மாறி அறிவிக்கும் காரணியாக இருப்பது இதுதான். உதாரணமாக... ஒருவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பின் இந்த நீர் மஞ்சள் நிறத்துக்கு மாறி எச்சரிக்கும். நமது உடலில் தோன்றும் எந்த ஆரோக்கியக் கேட்டையும் உடனடியாக தெரிவிக்கும் சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது ஆபத்தின் அறிகுறி என்கிற சிறுநீரகவியல் மருத்துவர் செளந்தர்ராஜன், அது பற்றிப் பேசுகிறார்.
சாதாரண கிருமித் தொற்று தொடங்கி, பெரிய நோயின் காரணமாக ஒருவருக்கு சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறலாம். சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது சிறுநீரில் தொற்று இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர்பை புற்றுநோயின் ஆரம்பமாக இருக்கலாம். சிறுநீர்பையில் கற்கள் இருப்பதாகவும் இருக்கலாம். குழந்தைகள், நடுத்தர வயதினர், முதியவர் என எந்த வயதினருக்கும் சிறுநீர் கழிக்கும்போது, ரத்தம் வெளியேறலாம்.
ஒரு சிலருக்கு சிறுநீரக பாதையில் காசநோய் (டி.பி.) இருந்தாலும் சிறுநீருடன் ரத்தம் வெளியேறும். சிறுநீர் கழிக்கும் நேரங்களில் எல்லாம் அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளிப்படுவதை உணர்பவர்கள் இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்... சிறுநீர் வெளியேறும் ஆரம்ப நிலையில் ரத்தம் வருகிறதா? இடைப்பட்ட நேரத்திலா? கடைசியில் ரத்தம் வருகிறதா? அல்லது சிறுநீர் முழுவதும் வெளியேறும் வரை ரத்தம் வெளியேறுகிறதா என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
சாதாரண காய்ச்சல் தொடங்கி, அதிக உடல் வலி, நீரிழிவு போன்றவற்றுக்கு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்கும், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறலாம். சில மருந்துகள் சிறுநீரை ரத்த நிறத்துக்கே மாற்றிவிடும். இதற்காக பயப்படத் தேவையில்லை. தாங்கள் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளால்தான் இவ்வாறு நடக்கிறது என்பது அந்தந்த மருத்துவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
வயதானவர்களுக்கு சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறினால் ப்ராஸ்டேட் சுரப்பி (Prostate Gland) வீக்கம் காரணமா என்பதை கண்டிப்பாக பரிசோதிக்க வேண்டும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு 4 கட்டங் களாக சிகிச்சை தரப்படும். முதலாவதாக சம்பந்தப்பட்டவரின் சிறுநீரை பரிசோதனை செய்வோம். கிருமி தொற்று உள்ளதா என்பதை பரிசோதித்துவிட்டு, கல்ச்சர் டெஸ்ட் செய்வோம். கடைசியாக, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்யப்படும்.
இந்த சிகிச்சை முறைகளுக்குப் பிறகு, தேவைப்பட்டால் சிடி ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எடுத்து பார்ப்போம். இவற்றில், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறுவதற்கான காரணம் என்ன என்பது தெரிந்து விடும். அதனைப் பொறுத்து சிகிச்சைகள் அமையும். இதில், Cystoscopy பரிசோதனை கண்டிப்பாக இடம்பெறும்.சிறுநீருடன் ரத்தம் வெளியேறும் பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவர் கூறுகிற அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். அதாவது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எந்தக் காரணத்துக்காகவும் சிறுநீரை அடக்கக்கூடாது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்ட உடன் கழித்துவிடுவதே நல்லது. அதன் மூலம் தொற்று வராமல் தடுக்கலாம்.’’
Post a Comment