கடுமையான வரட்சி, நெருக்கடியில் மின்சார உற்பத்தி
இலங்கையின் மத்திய மலை நாடு உள்ளிட்ட நாட்டில் நிலவி வரும் கடுமையான வரட்சி காரணமாக மின்சார உற்பத்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
காசல்ரீ மற்றும் மவுசாக்கலை ஆகிய நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
மழை வீழ்ச்சி இல்லாத காரணத்தினால் வான் கதவு திறக்கும் எல்லையிலிருந்து 40 அடி கீழ் மட்டத்தில் நீர் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மூன்று மாதமாக இவ்வாறு வரட்சி நிலவி வருவதாக மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக விமலசுரேந்திரா, லக்ஸபான, நியூ லக்ஸபான, பொல்பிட்டிய மற்றும் கெனியோன் ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்படும் நேரங்களில் தேசிய மின்னோட்டத்தில், நீர்மின் உற்பத்தி மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என மின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வரட்சி ஏற்பட்டாலும் மின்சாரம் தடை செய்யப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment