விருந்துக்கு அழைக்கப்பட்ட பின், எரியூட்டப்பட்ட ஐவர்
கடந்த வாரம் தங்கொட்டுவ பகுதியில் வாகனமொன்றிற்குள் வைத்து ஐவர் கொல்லப்பட்டமைக்கு கப்பம் பெறுவதற்கான முயற்சிகளே காரணம் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் ஐவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர் கொல்லப்பட்டவர்களில் மூவரை இனம் கண்டுள்ளோம், ஏனையவர்களை இனம் காண்பதற்காக மரபணு பரிசோதனைகள் இடம் பெறுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் நேவி கபில என்பவரும் உள்ளதாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் தங்கொட்டுவ பகுதியை சேர்ந்தவர்கள். அங்குள்ள ஆடை தொழிற்சாலைகளில் கப்பம் பெறும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர், நேவி கபில தற்போதே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார், அவரிற்கு எதிராக பல கொள்ளை குற்றச்சாட்டுகள் உள்ளன, அவர்கள் மாதம்தோறும் கப்பம் மூலம் பெருமளவு பணத்தை பெற்றுவந்தனர் எனவும் குற்றப்புலானய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாகனத்திற்குள் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டிருந்த அனைவரையும் நபர் ஒருவர் விருந்து நிகழ்வொன்றிற்கு அழைத்திருந்ததாகவும், மார்ச் பத்தாம் திகதி இவர்கள் நேவி பண்டாரவிற்கு கப்பம் வழங்கியதாகவும், எனினும் இதன் பின்னர் ஏற்பட்ட மோதலே படுகொலைக்கு காரணம் எனவும், அவர்கள் தடிகளால் அடித்து படுகொலை செய்யப்பட்டதாகவும் படுகொலைக்கு பின்னர் உடல்களை எடுத்து சென்று வாகனத்துடன் சேர்த்து தீ மூட்டியுள்ளதாகவும் குற்றப்புலானய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment