Header Ads



இந்தியாவுக்கு நன்றி - ஹக்கீம்


இந்தியாவின் எக்ஸிம் வங்கியின் நிதியுதவியுடன் இலங்கையின் மேற்கொள்ளவுள்ள மூன்று பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கான ஒப்பந்த கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (08) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இதில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் பொறியியலாளர் கே.ஏ.அன்ஸார், இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கி தலைவர் யதுவேந்திரா மதூர் ஆகியோர் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும்போது தெரிவித்ததாவது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது கலந்துரையாடப்பட்ட நீர் வழங்கல் திட்டத்திற்கமைவாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் பிரதிபலனாகவும் இந்நாட்டு மக்களுக்கான நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். 

இத்திட்டத்தை 403 மில்லியன் டொலர் செலவில் இம்மூவேறு திட்டங்களான அலுத்கம - மத்துகம - அகலவத்த, குண்டசாலை – ஆரகம, அலவ்வ - பொல்காவலை – பொத்துஹெர ஆகியவற்றை முன்னெடுக்கவுள்ளோம்.

இத்திட்டமானது 10 இலட்சம் மக்களுக்கான குடிநீரை பெற்றுக் கொள்ளத்தக்கதாகவும் 500 கிராம சேவை பிரிவுகள் உள்ளடக்கியதாகவும் அமையும்.

இத்திட்டத்திற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கிணங்க இந்தியாவின் எக்ஸிம் வங்கி தமது கடனுதவிக்கான மிக குறைந்த வட்டி வீதத்தை அறவிட முன்வந்துள்மை மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதன்மூலம் இன்னும் பல விததிட்டங்களை முன்னெடுக்க ஏதுவாக அமையும்.

இத்திட்டத்தை நாம் இந்திய வங்கியுடன் இணைந்து மிகவிரைவில் முன்னெடுப்பதையிட்டு பெருமிதம் கொள்வதோடு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்சிஷி பெர்னாண்டோபிள்ளே இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா அமைச்சின் செயலாளர், மேலதிகச் செயலாயளர்கள், தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதித் தலைவர் சபீக் ரஜாப்தீன், பொதுமுகாமையாளர், கடனுதவி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நிதியமைச்சின் முக்கியஸ்த்தர்கள், எக்ஸிம் வங்கியின் உயரதிகாரிகள், அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எம்.நஹிமுல்லாஹ், இணைப்புச் செயலாளர் ஏ.ஆர்.ஏ.ரஹ்மத் மன்சூர், உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

ஊடகப் பிரிவு

No comments

Powered by Blogger.