Header Ads



கை, கால்கள் கட்டப்பட்ட, இளம் பிக்கு காட்டிலிருந்து மீட்பு

இளம் பௌத்த பிக்கு (வயது - 23) ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் அம்பலாங்கொடை ரன்தொம்பே பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றின் அருகிலிருந்த பற்றைக் காடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை அம்பலாங்கொடை பொலிஸாரால் மீட்கப்பட்ட இவர், உடனடியாக பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட சமயம் அவர் பேசமுடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆரம்ப சிகிச்சையின் பின் பொலிஸாருக்கு வாக்குமூலம் கொடுத்த அவர், நேற்றுமுன்தினம் இரவு தான் தங்கியிருந்த அக்குரஸ்ஸ, சலகொட போதிராஜாராம விகாரைக்குள் ஆயுதபாணிகளாகப் புகுந்த ஐவர் தன்னைக் கடத்தி வாகனமொன்றில் ஏற்றியதாகவும், அங்கிருந்து குறிப்பிட்ட தூரம் சென்றபின் தன்னை இறக்கி கை, கால்களைக் கட்டியதுடன், வாயில் துணியை அடைத்து பற்றைக்காட்டில் போட்டுவிட்டுச் சென்றதாகவும், அவர்கள் போவதற்கு முன் தான் தேவையில்லாத விடயங்களில் மூக்கை நுழைத்தால் கொலை செய்யப்படுவேன் என மிரட்டி விட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு காலி பிரதான வீதியில் அம்பலாங்கொடை, ரன்தொம்பே பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீட்டுக்குப் பக்கத்தில் இந்தப் பிக்கு கிடந்ததைக் கண்ட இளைஞர் ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸ்நிலையத்துக்குத் தெரிவித்த தகவலொன்றின் அடிப்படையிலேயே இவர் மீட்கப்பட்டார்.

இவரைக் கடத்தியவர்கள் பற்றிய எவ்வித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் அம்பலாங்கொடை தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.மஹிந்த தெரிவித்தார்.

1 comment:

  1. This is a pre planned drama..No Logic matching..

    ReplyDelete

Powered by Blogger.