Header Ads



கருணை காட்டிய ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோபத்துக்கு இலக்காகி தொழிலை இழந்த ஊடகவியலாளர் ஒருவருக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதில் பிரதமர் அலுவலகம் தலையிட்டுள்ளது.

சிங்களத் தொலைக்காட்சியான தெரண தொலைக்காட்சியில் சங்க அமர்ஜித் என்றொரு பிரபல ஊடகவியலாளர் பணியாற்றுகின்றார்.

கடந்த சுதந்திர தின வைபவங்களின் போது புத்தரின் மாண்புகளைப் புகழும் சிங்களப் பாடல் ஒன்றை சிங்கள யுவதியொருவர் ஒபேரா வடிவில் இசைத்திருந்தார்.

இதனை காலை நேர தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சங்க அமர்ஜித் கிண்டலடித்திருந்தார். விரகதாபத்தில் ஏங்கும் பெண் பூனையின் அலறல் போன்று குறித்த பாடகியின் ஒபேரா ஓலம் ஒலித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. பெண்களை மதிக்கத் தெரியாத ஊடகவியலாளர்களை பணியில் வைத்திருக்கும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது நாடாளுமன்ற விசேட உரையொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து பிரதமரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் தெரண தொலைக்காட்சி நிறுவனம் ஊடகவியலாளர் சங்க அமர்ஜித்தின் சேவையை முடிவுக்குக் கொண்டு வந்து அவரை நிறுவனத்திலிருந்து வெளியேற்றியிருந்தது.

இந்நிலையில், சங்க அமர்ஜித்தின் கருத்தை மட்டுமே பிரதமர் விமர்சனத்துக்குட்படுத்தியதாகவும், அதற்காக அவரை பணிநீக்கம் செய்வது பாரிய தண்டனையாகும் என்று பிரதமர் அலுவலகம் தெரண தொலைக்காட்சிக்கு விளக்கம் ஒன்றை அனுப்பியிருந்தது.

அத்துடன் பணிநீக்கப்பட்ட ஊடகவியலாளர் சங்க அமர்ஜித்தை மீண்டும் பதவியில் அமர்த்த நடவடிக்கை எடுப்பது பற்றி கரிசனைகாட்டுமாறும் பிரதமர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்கு மதிப்பளிக்கும் வகையில் ஊடகவியலாளர் சங்க அமர்ஜித் இன்று தொடக்கம் தெரண தொலைக்காட்சி சேவையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.