இஸ்ரேல் இரகசியமாக மேற்கொள்ளும் ‘மாய கம்பளம்’
போரினால் பாதிக்கப்பட்டுள்ள யெமனில் எஞ்சியிருக்கும் யூதர்களில் சிலரை தாம் மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ரகசிய நடவடிக்கை ஒன்றின் மூலமாக சனா மற்றும் ரேடா நகரிலிருந்து பத்தொன்பது பேர் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் சுமார் 50 யூதர்கள் தொடர்ந்து யெமனிலேயே தங்கிவிட முடிவெடுத்ததாக இஸ்ரேலுக்கு யூதர்களை குடியமர்த்தும் யூத அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
யெமனிய யூதர்கள் உலகின் மிகப் பழைமையான யூத சமூகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றனர்.
இவர்கள் உயிருக்கு, சவுதி தலைமையிலான கூட்டுப்படையுடன் சண்டையிடும் ஷியா ஹூத்தி கிளர்ச்சிக்காரர்கள் ஒரு அச்சுறுத்தலாக இருந்ததாக இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு கொண்டுவரப்பட்டவர்களில் ஒரு மதகுருவும் அடங்குவார். அவர் தன்னுடன் கிட்டத்தட்ட ஐனூறு ஆண்டுகள் பழமையான ஒரு டோராச் சுவடியை கொண்டுவந்துள்ளார்.
உலகில் சிவில் யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் சிக்கிக் கொள்ளும் யூதர்களை மீட்க இஸ்ரேல் கடந்த காலங்களிலும் இவ்வாறான ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது தொடக்கம் 51,000க்கும் அதிகமான யெமன் யூதர்கள் இஸ்ரேலுக்கு குடியேறி இருப்பதாக மேற்படி யூத அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதில் 1949 மற்றும் 1950ஆம் ஆண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘மாய கம்பளம்’ என்ற ரகசிய நடவடிக்கை மூலம் இஸ்ரேல் சுமார் 50,000 யெமன் யூதர்களை இஸ்ரேலில் குடியமர்த்தியது.
Post a Comment