"மதப் பேரரசை' நிறுவ துனிசியாவில் தாக்குதல்
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் "மதப் பேரரசை' துனிசியாவில் நிறுவுவதற்காகவே அந்த நாட்டில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக, அந்த நாட்டுப் பிரதமர் ஹபீப் எஸீத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
துனிசியாவின் "பென் கார்டேன்' பகுதியில் பாதுகாப்பை சீர்குலைப்பதே, ராணுவ மற்றும் காவல்துறை நிலைகள் மீது திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலின் நோக்கமாகும்.
அந்தப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் "மதப் பேரரசை' நிறுவுவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
எனினும், துனிசிய ராணுவமும், உள்ளூர் பாதுகாப்புப் படையினரும் மிக விரைவாகச் செயல்பட்டு அந்தத் தாக்குதலை முறியடித்தனர் என்றார் அவர்.
துனிசியாவின் பென் கார்டேன் பகுதியில் காவல் நிலையத்திலும், ராணுவ மையங்களிலும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நிகழ்த்தினர்.
அவர்களுடன் நிகழ்ந்த சண்டையில் 11 ராணுவ வீரர்களும், 12 வயது சிறுமி உள்ளிட்ட 7 பொதுமக்களும் உயிரிழந்தனர்.
தாக்குதல் நிகழ்த்திய 35 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அண்டை நாடான லிபியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பலம் பெற்று வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், லிபிய எல்லையையொட்டிய பென் கார்டேன் பகுதியில் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துனிசியாவில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட 3 பயங்கரவாதத் தாக்குதல்களில் 70 பேர் உயிரிழந்தது நினைவுகூரத் தக்கது.
Post a Comment