Header Ads



யாழ் அஸீமின் "முகவரி தொலைத்தவர்கள்"


இலங்கை கலாச்சார அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட உலக கவிதை தினவிழா – 2016 நெலும்பொக்குன மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் 22.03.2016 அன்று நடைபெற்றது. நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து பெருந்தொகையான கவிஞர்கள் கலந்து கொண்டனர். இதன்போது பிரபலமான இலங்கை கவிஞர்களின் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் அடங்கிய 'மானுடம் பாடும் கவிதைகள்' என்னும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள யாழ் அஸீமின் கவிதை இது. 

முகவரி தொலைந்தவர்கள்

முகாமிருளில் முகம் புதைத்து வாழும் இவர்கள்
முகவரியை தொண்ணூறில் தொலைத்தவர்கள்
அன்றுதான்
இவர்கள் வாழ்க்கை களவாடப்பட்டது,
சொத்துக்கள் சலவை செய்யப்பட்டன.
இவர்கள் விடியலைத் தேடும் விட்டில் பூச்சிகள்
சுடுகின்ற நெருப்பைச் சூரியன் என நம்பி
விடியலைத் தேடும் குடில்வாசிகள்!
புன்னகையை விற்றுக் 
கண்ணீரை கடன் வாங்கிய 
இவர்கள் வியாபாரத்தில் 
எஞ்சிய சில மூச்சுக்கள் தான்!
உப்புச் சுமந்த இவர்கள்
உடல் தழும்பில் வலியில்லை
எனினும் இவர்கள் இதயத்தழும்பில் மட்டும்
இன்னும் வலி மாறவில்லை!
கிழிந்த ஆடைகளைப் பற்றிக்
கவலைப்படுவதில்லை 
இவர்கள் கலலையெல்லாம் - தம் 
கிழிந்த வாழ்க்கையைப் பற்றித்தான்!
இவர்கள் வயிற்றில் எரியும் நெருப்பை 
கால் வயிற்றுக் கஞ்சி
எப்படித்தான் அணைக்கிறதோ?
இதயம் கொதித்தெழும்பும்
இவர்கள் ஏக்கப் பெருமூச்சுக்களைத்தான்
புத்தளத்து அனல்காற்று
கடன் வாங்கிக் கொண்டதோ?
உப்புச் சுமக்கும் - எம் 
உடன் பிறப்புக்களின் 
கண்ணீரும் வியர்வையும்தாம்...
உப்பளத்து நீரின் சுவையானதோ?
இவர்கள் விடியலுக்காய்
எத்தனையோ ஒப்பந்தங்கள் 
ஆனாலும் இவர்களோ...
மண்ணுக்கும் மூச்சுக்கும் 
ஒப்பந்தம் முடிவதற்கு 
எஞ்சியுள்ள நாட்களைத்தான்
எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!  

1 comment:

  1. Excellent, but very Sad. We have to strengthen Rishard's hand to solve their problem. He is the shining star for Muslims from North and East.

    ReplyDelete

Powered by Blogger.