மகிந்தவுக்கு எதிராக விசாரணை இல்லையென்கிறார் மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை தேவையில்லை என அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த 17ம் திகதி கொழும்பு ஹைட் மைதானத்தில் நடத்தப்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க அறிவித்திருந்தார்.
எனினும், இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமிருக்காது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவே தீர்மானிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், கூட்டத்தில் பங்கேற்ற சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனெனில் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் எவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ அல்லது கட்சியையோ விமர்சனம் செய்யவில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராகவே குரல் கொடுத்தனர் எனவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 37 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாhயக்க கடந்த சில தினங்களாக பல்வேறு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment