டொனால்ட் டிரம்புக்கு 8 வயது சிறுவன், எழுதியுள்ள பரபரப்புக் கடிதம்
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அருகில்கூட போக விடக்கூடாது என அந்நாட்டை சேர்ந்த 8 வயது மாணவன் ஒருவன் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கரோலினாவில் உள்ள Jamestown என்ற நகரில் ஜாக்சன் வீல்லஸ் என்ற 8 வயது மாணவன் அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வருகிறான்.
’நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடைபெற்று வருவதால் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் செய்திகளை தினமும் பாருங்கள்’ என ஜாக்சனின் ஆசிரியர் ஒருமுறை கூறியுள்ளார்.
ஆசிரியரின் அறிவுரைக்கு பின்னர் ஜாக்சன் தவறாமல் செய்திகளை கவனித்து வந்துள்ளான். இதன் விளைவாக, தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்பிற்கு ஜாக்சன் ஒரு பகிரங்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.
அதில், ‘டொனால் டிரம்ப் அவர்களுக்கு வணக்கம், தொலைக்காட்சி செய்திகளில் உங்களை தினமும் கவனித்து வந்ததில் ஒரு விடயம் புரிகிறது.
நீங்கள் பேசுவதிலிருந்து நீங்கள் ஒரு கொடூரமானவர் என்பது தெளிவாக புரிகிறது. ஒரு உடல் ஊனமுற்ற செய்தியாளரை நீங்கள் அவமானப்படுத்திய அந்த வீடியோவை பார்த்தேன். மிகவும் கொடூரமாகவும் வேதனையாகவும் உள்ளது.
’நகரின் மத்தியில் நின்றுக்கொண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டால் கூட எனக்கு வரும் வாக்குகளில் எந்த மாற்றமும் இருக்காது’ என திமிராக நீங்கள் பேசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஒரு நாட்டுக்கு தலைவராகும் ஒருவர் இப்படி வன்முறையாக பேசுவார்களா? உங்கள் குழந்தைகள் அல்லது உங்கள் பேரக்குழந்தைகள் இந்த பேச்சை விரும்புவார்களா?
இந்த எண்ணம் உள்ள ஒருவர் ஜனாதிபதி ஆகிவிடுவாரோ என்ற அச்சம் என்னை போன்ற பல மாணவர்களின் மனதில் எழுந்துள்ளது.
நீங்கள் தவறாக செய்த அல்லது கூறிய எந்த செயலுக்கும் வார்த்தைக்கும் நீங்கள் இதுவரை வருத்தம் தெரிவித்தது இல்லை. மன்னிப்பு கோரியதும் இல்லை.
நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இந்த நாட்டு குழந்தைகள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி தான் அந்த நாட்டு குழந்தைகளுக்கு ஒரு சிறந்த முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
ஆனால், நான் உங்களை பின்பற்ற விரும்பவில்லை. நீங்கள் அறிவுரை கூறும் ஒரு மனிதராகவும் வளர நான் விரும்பவில்லை.
தயவுசெய்து இந்த நாட்டு குழந்தைகளை பற்றி சிந்தியுங்கள். குழந்தைகளான எங்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்பது எனக்கு தெரியும்.
ஆனால், நாங்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம் என்பதை நீங்கள் மறக்க கூடாது. ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் கூறுவதை தவிர்த்துவிட்டு அதை விட சிறந்த மனிதராக நான் வளர்வேன்’ எனக்கூறி ஜாக்சன் அந்த கடிதத்தை முடித்துள்ளான்.
ஜாக்சன் எழுதிய இந்த கடிதம் இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Brave boy. I appreciate your brave have a good future.
ReplyDeletevery good
ReplyDelete