புலிகளிடம் கைப்பற்றிய 80 கிலோ தங்கத்தில், 40 கிலோவைக் காணவில்லை - பிரதமர்
போரின் முடிவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதி இராணுவத்திடம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று -09- இதுதொடர்பான தகவல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார்.
”போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினரால் 150 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.
அதில் 131 மில்லியன் ரூபா பெறுமதியான 30 கிலோ (31,150.34 கிராம்) தங்கம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டது. 2010 செப்ரெம்பருக்கும், 2012 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில், 28 சந்தர்ப்பங்களில் இவை ஒப்படைக்கப்பட்டன.
மேலும் 80 கிலோ தங்க நகைகள் சிறிலங்கா இராணுவத்தினரிடம் இன்னமும் உள்ளன. ஆனால் அவை இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை.
அதேவேளை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 40 கிலோ தங்கத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
விடுதலைப் புலிகளின் வங்கியில் வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் நகைகளை அடையாளம் கண்டு அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்த தகவல்களை வெளியிட்டு, உண்மையான உரிமையாளர்களை அடையாளம் காண வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் உதவ வேண்டும்” என்றும் அவர் கோரியுள்ளார்.
Post a Comment