8 மணிநேரம் நிற்க வைத்து, கோத்தாபயவிடம் தொடர் விசாரணை
ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவன ஊழல், அவன்கார்ட் நிறுவன ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நேற்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை தொடர்ச்சியாக 8 மணிநேரம், நிற்க வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முன்னைய அரசின் ஊழல்கள், மோசடிகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக, ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவன ஊழல், அவன்கார்ட் நிறுவன ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க கோத்தாபய ராஜபக்ச நேற்று முன்னிலையானார்.
ஏற்கனவே எட்டுத் தடவைகள் விசாரிக்கப்பட்டிருந்த அவர் நேற்று கடுமையான விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய- அவரிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை சுமார் எட்டு மணி நேரம் நீடித்தது.
எட்டு மணித்தியாலயமும் நின்று கொண்டே கோத்தாபய ராஜபக்ச சாட்சியம் அளித்தார்.
விசாரணையின் பின்னர் கருத்து வெளியிட்ட அவர், “இன்று என்னிடம் வாக்குமூலம் பெறவேண்டும் என வரவழைத்து எட்டு மணிநேரம் வாக்குமூலம் பெற்றனர்.
நின்று கொண்டே மிகநீண்ட நேரம் வாக்குமூலம் வழங்கினேன். பின்னர் வாக்குமூலம் பதிவுசெய்ய நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி ஒருவர் எனக்கு ஆசனம் ஒன்றை வழங்கினார்.
எம்மை பழிவாங்கவும் எமது பயணத்தையும் மக்கள் எம்மீது வைத்துள்ள ஆதரவையும் முற்றாக அழித்து எம்மை முழுமையாக ஓரங்கட்டும் வகையில் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது” என குறிப்பிட்டார்.
Post a Comment