பாதாள குழுக்களுக்கு, அடைக்கலம் வழங்கும் 7 அரசியல்வாதிகள்
பாதாள உலகக் குழுத் தலைவர்களுக்கு அரசியல்வாதிகள் அடைக்கலம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலகச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும், திட்டமிட்ட வகையில் நாட்டில் பாரியளவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழுக்களின் முக்கியஸ்தர்களுக்கு ஏழு அரசியல்வாதிகள் அடைக்கலம் வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாதாள உலகக்குழுச் செயற்பாடுகளை உரிய வகையில் கட்டுப்படுத்த முடியவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை, கம்பஹா, மாளிகாவத்தை, மினுவன்கொட, கடுவெல, கொலன்னாவ, மாத்தறை, காலி போன்ற பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் பாதாள உலகக் குழுக்களுக்கு இவ்வாறு அரசியல்வாதிகள் அடைக்கலம் வழங்கியுள்ளனர்.
இதனால் சட்டத்தை அமுல்படுத்த முயற்சிக்கும் அதிகாரிகளினால் தமது கடமைகளை சரிவர செய்ய முடியவில்லை.
பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினரைக் கொண்டு கடந்த அரசாங்கம் பாதாள உலகக்குழுக்களை கட்டுப்படுத்தியிருந்தது.
இந்த நடவடிக்கைகளினால் நாட்டை வெளியேறியிருந்த பாதாள உலகக் குழுவினர் தற்போது மீளவும் நாட்டுக்கு வந்துள்ளனர்.
முக்கிய அரசியல்வாதிகளின் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தற்போது அவர்களின் அடைக்கலத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
சர்வதேச பொலிஸாரினால் சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கொட்ட காமினி மற்றும் தெல் பாலா ஆகியோர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கடல் வழியாக இலங்கை வந்து மேல் மாகாண அரசியல்வாதி ஒருவரின் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு பின்னர் மீளவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சிங்கள வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment