இலங்கை சார்பில், சீனாவுக்கு 72 நிபந்தனைகள்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் ஏப்ரல் 6ஆம் நாள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும், சீன முதலீட்டாளருக்கும் இடையில் இணக்கம் ஏற்படுத்தப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலர் நிகால் ரூபசிங்க கருத்து வெளியிடுகையில்,
“சீன முதலீட்டாளருடன் தற்போது பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மூல உடன்பாட்டைச் செய்துள்ள சீன தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்துடன், மீள இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.
ஏப்ரல் 6ஆம் நாளுக்கு முன்னதாக, சீன முதலீட்டாளருடன் இறுதியான இணக்கப்பாட்டை எட்டுவதற்காக அரசாங்க அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று தொடர்ந்தும், பேச்சுக்களை நடத்துகிறது.
முக்கியமாக குத்தகைக்காலம், மற்றும் மீட்கப்படும் நிலத்தின் அளவு தொடர்பாக, பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.
தற்போது நடத்தப்படுகின்ற பேச்சுக்களில், தாமதத்துக்கான இழப்பீடு தொடர்பாகவும் பேசப்படுகிறது. இதுவும் திருத்தப்பட்ட உடன்பாட்டில் உள்ளடக்கப்படும்.
அதிகாரிகள் இணக்கப்பாட்டை எட்டியதும், அதுபற்றிய வரைவு அமைச்சரவைக் குழுவிடம் வழங்கப்பட்டு, அனுமதி பெறப்பட்டு இறுதி அனுமதிக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி 72 நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு அமைய திட்டத்தை தொடர்வதற்கு சீன முதலீட்டாளர் இணங்கியுள்ளார்.” என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment