கல்முனையில் மாபெரும் 6 நாள், இலவச வைத்தியமுகாம்
(சகா)
கல்முனை றோட்டரிக்கழகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் கலந்துகொள்ளும் பாரிய காதுமூக்கு தொண்டை வைத்தியமுகாம் முகாம் நாளை 7ஆம் திகதி கல்முனை ஆதாரவைத்தியசாலையில் ஆரம்பமாகின்றது.
காதுமூக்குதொண்டைக்கான இப்பாரிய வைத்தியமுகாம் நாளை 7ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என கல்முனை றோட்டரிக்கழகத் தலைவர் றோட்டரியன் சீனித்தம்பி அழகுராஜா தெரிவித்தார்.
வடஇந்திய றோட்டரிக்கழக மனிதகுலசேவையின் ஓரங்கமாக வடஇந்தியாவின் ராஜஸ்தான் மாநில சிறப்பு வைத்திய நிபுணர் டாக்டர் விக்றன்ற் முத்தூர் தலைமையிலான நிபுணர்கள் குழுவில் டாக்டர்களான பியானிமுத்தூர் இன்ரர்பிரசாத்சிங் கல்பிற்றிசிங் சோப்ராகோபால்தாஸ் ஆகிய 5 நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கொழும்பு வடக்கு றோட்டரிக்கழகத்தினர் அனுசரணைவழங்குகின்றனர்.
நாளை காலை அங்குராப்பணவிழா!
இவ் ஆறுநாள் பாரிய வைத்தியமுகாமின் சம்பிரதாயபூர்வமான அங்குரார்ப்பணவிழா நாளை திங்கட்கிழமை காலை கல்முனை றோட்டரிக்கழகத் தலைவர் றோட்டரியன் சீனித்தம்பி அழகுராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
பிரதம அதிதிகளாக கிழக்குமாகாண ஆளுநர் ஒஸ்ரின்பெர்ணாண்டோ இலங்கை மற்றும் மாலைதீவிற்கான றோட்டரி மாவட்டம் 3220ற்கான றோட்டரி மாவட்ட ஆளுநர் றோட்டரியன் ஜோர்ஜ் ஜேசுதாசன் ஆகியோர் கலந்துசிறப்பிப்பார்கள்.
விசேட அதிதிகளாக கொழும்பு வடக்கு றோட்டரிக்கழகத்தலைவர் றோட்டரியன் இந்ரகுமாரகுணதிலக கொழும்புவடக்கு றோட்டரிக்கழக தொழில்பயிற்சி பிரிவிற்கான தலைவர் றோட்டரியன் பி.பி.தயானி பனாகொட ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சகலருக்கும் இலவச சிகிச்சை!
கல்முனை ஆதாரவைத்தியாசாலையின் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் ஆகியோரின் பூரண ஒத்துழைப்பின்பேரில் இதுவரை 400பேருக்கும் அதிகமான நோயாளிகள் ஆரம்பக்கட்ட ஸ்கிறினிங் சோதனை செய்யப்பட்டு சிகிச்சைக்காக தயார்நிலையிலுள்ளனர்.
நாளையதினமே சத்திரசிகிச்சை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவர்களும் புதியவர்களுமாக இனமதபேதமின்றி அனைவரும் இவ்ஆறுநாள் முகாமை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதே என்பதே எமது நோக்கம். சகலரும் இவ்வைத்தியமுகாமில் சிகிச்சை பெறமுடியுமென இவ்விசேடவைத்தியமுகாமிற்கான பிரதான இணைப்பாளர் றோட்டரியன் வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார்.
காதுகேட்கும் இயந்திரம் இலவசம்!
இம்முகாமில் செவிப்புலன்குன்றியவர்களுக்கு காதுகேட்கும் இயந்திரம் இலவசமாக வழங்கிவைக்கப்படவுள்ளது. இவ்வியந்திரம் ஒவ்வொன்றும் 65ஆயிரம் ருபா பெறுமதியானது. தேவையான இயந்திரங்களை எம்மால் வழங்கமுடியுமென கல்முனை றோட்டரிக்கழக செயலாளர் முத்துக்குமார் சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.
மேலும் கால் ஊனமானவர்கள் பொய்க்கால் வேண்டி நிற்பவர்களுக்கு இலவசமாக பொய்க்கால் வழங்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
Post a Comment