நல்லாட்சி அரசாங்கத்தில், 5 அமைச்சர்களுக்கு எதிராக ஊழல்மோசடி குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் ஐந்து அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து அமைச்சர்கள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் குறித்த சகல தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. இந்த தகவல்களுடன் எதிர்வரும் நாட்களில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு மற்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியற்றுக்குச் சென்று முறைப்பாடு செய்யப்படும்.
கடந்த காலங்களைப் போன்றே 2015ம் ஆண்டின் பின்னரும் மக்களின் பணத்தை கொள்ளையிடும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளுக்காக குரல் கொடுத்த சிலரும் இந்தப் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
ஊழல் மோசடிகளுக்கு எதிரான குரல் அமைப்பு ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்களை திரட்டியுள்ளது.
சில தரப்பினர் கடந்தகால ஊழல் மோசடியாளர்களுடன் இணைந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் அனைத்து நபர்களும் சட்டத்தின் முன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment