வானில் எரிந்த 5 சடலங்கள் - முஸ்லிம் ஒருவரும் உள்ளடக்கம் (சம்பவ முழுவிபரம் இணைப்பு)
தங்கொட்டுவ, புஜ்ஜம்பொல - இரபடகம பகுதியில் உள்ள பாழடைந்த வீதியொன்றில் எரிந்த நிலையில் இருந்த வேனிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்ட 5 சடலங்களில் நேவி கபில எனப்படும் கபில செனரத் பண்டாரவின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேவி கபிலவின் மனைவியும் அவரது உறவுக்கார இளைஞர் ஒருவரும் குறித்த சடலத்தை நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து அடையாளம் காட்டியுள்ளனர்.
நேவி கபிலவின் வலது காலில் உள்ள உபாதைதொடர்பில் செய்யப்பட்ட சத்திர சிகிச்சையின் போது வைக்கப்பட்ட தகடு மற்றும் அவரது கழுத்தில் இருந்த வெள்ளி சங்கிலி ஆகியவற்றைக் கொண்டே சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ ஐவர் படுகொலை தொடர்பில் பிரபல வர்த்தகர் ஒருவர் உள்ளிட்ட ஐந்துபேர் கைதாகியுள்ள நிலையில் கொலையுண்டவர்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனைகள் நேற்று நீர்கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெற்றது. இதன் போதே நேவி கபிலவின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொலையுண்ட ஏனையோர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் வத்தளை பகுதியைச் சேர்ந்த நைனா எனப்படும் மொஹம்மட் நெளஷாட், பேலியகொட நீல், சூப்புவா எனப்படும் கந்தானை கிரிஷாந்தா ஆகிய மூவரும் உள்ளடங்குவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.
ஏனைய நபர் இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் அது குறித்து தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொலையுண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள ஐவரின் சடலங்களையும் ஸ்கேன் பரிசோதனை ஒன்றுக்கு உட்படுத்தி அடையாளம் காண்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கருகியுள்ள உடலங்களில் இருந்து டி.என். ஏ. மூலக் கூறுகளைப் பெற்று கொலையுண்டதாக கருதப்படும் நபர்களின் உறவினர்களின் டி.என்.ஏ.உடன் ஒப்பீடு செய்து அது தொடர்பில் உறுதியான முடிவுக்கு வருவது குறித்தும் பொலிஸார் ஆராய்ந்து வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணையின் போது நேவி கபிலவின் தொலைபேசி அழைப்புப் பட்டியலை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தினர். இக்கொலை இடம்பெற்றதாக நம்பப்படும் இரவு இறுதியாக நேவி கபிலவுடன் தொடர்பில் இருந்தோர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவதானம் செலுத்தினர்.
இதன் போது தங்கொட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் உருவருடன் இறுதியாக நேவி கபில தொடர்புகொண்டுள்ளமையும் அந்த தொலைபேசி உரையாடலின் போது அந்த வர்த்தகர் தங்கொட்டுவ பகுதியிலேயே இருந்துள்ளமையும் உறுதியானது.
இந் நிலையிலேயே குறித்த வர்த்தகரை கைது செய்ய தயாரான நிலையில் பொலிஸார் அவர் பன்னல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனையடுத்து அவரை பொறுப்பேற்ற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொலையின் போது உதவிய சமிந்த என்ற கொலை குற்றச்சாட்டு உள்ள நபர் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்தனர்.
சம்பவ தினம் இரவு முதலில் நேவி கபிலவே குறித்த வர்த்தகருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்துள்ளமையும், இதன் போது இரவு மதுபான விருந்தொன்றை ஏற்பாடு செய்யுமாறு மஞ்சுவுக்கு கூறியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான வர்த்தகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ள ஒப்புதல் வாக்கு மூலத்தின் படி, நேவி கபில மாதாந்தம் 30 முதல் 40 ஆயிரம் ரூபாவை அவரிடம் கப்ப்மாக பெறுவதாக தெரியவந்துள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமலேயே கொலை திட்டத்தை தீட்டியதாக சந்தேக நபரான வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
சம்பவ தினத்துக்கு முன்னைய தினமும் கபில 70 ஆயிரம் ரூபா கப்பம் கோரியதாகவும் அதனை எடுத்துச் செல்ல வரும் போதே மது விருந்துக்கு ஏற்பாடு செய்யுமாறு தொலைபேசியில் கூறியதாகவும் அதன் பின்னரேயே தனது நண்பனான சமிந்தவுடன் சேர்ந்து கொலை திட்டத்தை தீட்டியதாகவும் வர்த்தகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந் நிலையில் மூன்று உயர் ரக மதுபானத்துடன் உணவையும் தயார் செய்து மதுவில் மாத்திரைகளைக் கலந்து நேவி கபிலவின் குழுவினருக்கு அருந்த கொடுத்ததாகவும் அதன் பின்னர் ஒவ்வொருவராக சிறு நீர் கழிக்க வரும் போது இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்ததாகவும் வர்த்தகர் வாக்குமூலமளித்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது சத்தம் வெளியே கேட்காமல் இருக்க வானின் பாட்டு சத்தத்தை கூட்டி வைத்திருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சடலங்களை மாக்கந்துர வாராந்த சந்தை பகுதிக்கு சந்தேக நபர்கள் எடுத்துச் சென்றுள்ள நிலையில், அங்கு கைவிட்டு செல்ல முனைந்துள்ளனர்.
எனினும் அங்கு சென்று சடலங்களை வைத்த பின்னர் பொலிஸாரிடம் சிக்குவோமோ என்ற அச்சம் ஏற்பட்டதால், மீண்டும் சடலங்களை வானில் போட்டு தங்கொட்டுவ - இரபடகம பகுதியின் பாழடைந்த வீதியில் வைத்து எரித்துள்ளனர்.
மாக்கந்துர சந்தை பகுதியில் வைத்தும் சந்தேகத்துக்கு இடமான இரத்தக் கறைகள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந் நிலையில் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
நேவி கபிலவின் சடலத்தை ஏற்றுக்கொள்ள அவரது மனைவி மறுத்துள்ளார்
கடந்த 10ம் திகதி தங்கொட்டுவ இரபடகம கொஸ்ஹின்ன மக்கள் நடமாற்றமற்ற பகுதியில் வாகனமொன்றிற்குள் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஐந்து சடலங்களில் ஒன்று நேவி கபில என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரதாகும். இந்த சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.
எனினும் சடலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நேவி கபிலவின் மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
36 வயதான கொடிதுவக்கு ஆராச்சிகே காஞ்சனி இசுரு பிரியங்கனி என்பவரே இவ்வாறு சடலத்தைப் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையின் போது, தங்கொட்டுவ பொலிஸாரிடம் சடலத்தை அடையாளம் காட்டிய பிரியங்கனி, சடலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வாக்கு மூலம் அளித்துள்ளார்.
தந்தை உயிருடன் இருப்பதாகவே எனது மூன்று பிள்ளைகளும் நம்புகின்றார்கள். இவ்வாறான நிலையில் சீல் வைக்கப்பட்ட நிலையில் பிரேதம் அடங்கிய சவப் பெட்டியை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது என அவர் தெரிவத்துள்ளார். இதன்படி அரசாங்கத்தின் செலவில் நேவி கபிலவின் சடலம் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment