Header Ads



தெஹிவளை 4 பேரின் மரணத்தில் சந்தேகம் - பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர


தெஹிவளை கௌடான வீதியிலிருந்து நேற்று கருகிய நிலையில் மீட்கப்பட்ட நான்கு சடலங்களினதும் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

உயிரிழந்த நால்வரினதும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்களினது மரணத்திற்கான காரணம் உறுதியாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லையென்றும் சந்தேகம் இருப்பதால் தொடர்ந்தும் “விசாரணைகளின் கீழ்” என்றே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை நான்கு சடலங்களினதும் உடல் பாகங்கள் இரசாயண பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பிரேத பரிசோதனைகளையடுத்து ஆஸ்பத்திரியினால் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன.

கௌடானா வீதியிலுள்ள இரண்டு மாடி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நால்வரினதும் சடலங்கள் நேற்றுக் காலை தெஹிவளை மையவாடியில் பெரும்திரளான மக்களின் வருகைக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீட்டில் கசிந்த நச்சுவாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குறித்த நான்கு பேரும் உயிரிழந்திருக்க வேண்டுமென பரவலாக சந்தேகிக்கப்படுகின்றது.

இவர்களது வீட்டில் சமையலறை முற்றாக எரிந்த நிலையில் காணப்பட்டதுடன் வீட்டின் அனைத்துப் பொருட்களிலும் கருகிய புகை படிந்து காணப்பட்டுவதனை அவதானிக்க முடிகிறது.

சம்பவம் இடம்பெற்ற வீடு பொலிஸாரினால் ‘சீல்’ வைக்கப்பட்டிருப்பதனால் தெஹிவளையிலுள்ள அவர்களது உறவினர் வீட்டிலிருந்தே நேற்று இறுதி கிரியைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

No comments

Powered by Blogger.