'ஜனாதிபதியிடம் 45,000 முறைப்பாடுகள்"
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு கடந்த 2016 ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் சேவைக்கு இதுவரை சுமார் 45,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இத்தகவலை 'ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்' நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதற்காக நேற்று (08) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் திரு.ஷிரால் லக்திலக தெரிவித்தார். 'பொதுமக்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையை அதிகரிப்பதே இச்சேவையின் நோக்கமாகும்' என்றும் திரு.லக்திலக மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் மக்களின் மனக்குறைகள் தீர்க்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும், ஒரு முறையான ஒழுங்கில் பொதுமக்களின் மனக்குறைகளை தீர்ப்பதற்கான ஒரு மத்திய முறைமை ஏற்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். இந்த புதிய முறைமையின் காரணமாக பல கடிதங்களும் கோவைகளும் நீண்டகாலமாக நடவடிக்கைகள் எடுக்கப்படாது கிடப்பில் போடப்பட்டிருந்த யுகத்திற்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.
'ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்' சேவையூடாக பதிவு செய்யப்பட்டுள்ள 44677 மனக்குறைகள், கருத்துக்களில் பெரும்பாலும் அரைவாசிக்கு மேற்பட்டவை 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பு மேற்கொண்டு அரசாங்க தகவல் நிலையத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்டவையாகும் என்பதோடு, ஏனையவை மின்னஞ்சல் ; (tell@presidentsoffice.lk) முகநூல் (MaithripalaS) அல்லது தபால் மூலம் (Tell President, P.O.box 123, Colombo.) பதிவு செய்யப்பட்டவையாகும்.
பொது மக்களுக்கு துரிதமாகவும் பொறுப்புடன் பதிலளிப்பதையும் உறுதி செய்வதற்கு சகல அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் இச்சேவையுடன் இணைந்துள்ளதோடு, குறித்த மனக்குறைகளை கையாள்வதற்கான முறையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதென ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் திரு.எஸ்.ரி.கொடிக்கார தெரிவித்தார்.
'ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்' நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் தனிப்பட்ட, சமூகம் சார்ந்த, கிராமியத்துறை சார்ந்த, சுகாதாரம், கல்வி, சுற்றாடல், பொருளாதாரம், ஊழல், கொள்கை மற்றும் கருத்துக்கள் சார்ந்தவை என பல்வேறுபட்டவையாகும்.
Post a Comment