Header Ads



நவீனமாகிறது கட்டுநாயக்கா விமான நிலையம் - ஜப்பான் 400 மில்லியன் டொலர் கடன்


கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் புதிய முனையத்தை அமைப்பதற்கு, 400 மில்லியன் டொலரை கடனாக வழங்குவதற்கு  ஜப்பான் முன்வந்துள்ளது.

ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகள் பயணங்களை மேற்கொள்ளத்தக்க வகையில், இரண்டாவது முனையத்தை அமைப்பதற்கு, கடனுதவி வழங்கவுள்ளதாக ஜிகா எனப்படும் ஜப்பானின் அனைத்துலக கூட்டு முகவரகம் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு இந்தப் புதிய முனையம் திறக்கப்படும். சூரிய மின்சக்தி மூலம் செயற்படும் வகையிலும், கழிவுநீர் ஆலையில் இருந்து மீள்சுழற்சி செய்யப்பட்ட நீரை கழிப்பறைகளுக்குப் பயன்படுத்தும் வகையிலும் இங்கு வசதிகள் செய்யப்படும்.

ஜப்பானின் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஜிகாஅமைப்பு தெரிவித்துள்ளது.

40 ஆண்டுகளில் செலுத்தத்தக்க வகையில், 0.1 வீத வட்டிக்கு இந்தக் கடனுதவி வழங்கப்படும். இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் கடந்த வாரம் உடன்பாடு காணப்பட்டுள்ளது,

தற்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஆண்டுக்கு 8.5 மில்லியன் பயணிகள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக அமைக்கப்படவுள்ள முனையம் ஆண்டுக்கு ஆறு மில்லியன் பயணிகள் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்படும்.

2009இல் சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், சுற்றுலாப் பயணிகளின் வருகை சடுதியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு1.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்திருந்தனர்.

அதேவேளை, இந்திய உபகண்டத்தில் இருந்து, ஐரோப்பா மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகளின் இடைத்தங்கல் நிலையமாகவும் சிறிலங்கா மாறியுள்ளது.

1 comment:

Powered by Blogger.