தொட்டிலில் பேசிய 3 குழந்தைகள்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: ''மூன்று பேர்கள் மட்டுமே தொட்டிலில் இருக்கும்போது பேசியுள்ளார்கள்''.
1. ஈஸா இப்னு மரியம் அலைஹிஸ்ஸலாம்.
2. பனூ இஸ்ராயீல் வம்சத்தில் ஜுரைஜ் என்று ஒரு இறையடியார் இருந்தார். அவர் தனக்கென வணங்குமிடத்தை கட்டி அதில் எப்பொழுதும் இறைவனைத் தொழுது கொண்டிருந்தார். ஒரு நாள் அவரது தாய் அவரை அழைத்தார். தாய்க்கு பதில் கூறாமல் அவர் இறைவனைத் தொழுது கொண்டிருந்தார். இரண்டாவது முறையாக (அவரது தாய்) அவரை அழைத்தார். அப்பொழுதும் ஜுரைஜ் தாயின் அழைப்புக்கு பதில் அளிக்காமல் இறைவனை வணங்கிக் கொண்டிருந்தார்.
இதைக்கண்டு கோபமுற்ற (அவரது) தாய்: ‘யா அல்லாஹ்! இந்த ஜுரைஜ், விபச்சாரியின் முகத்தைப் பார்க்காமல் மரணிக்கச் செய்துவிடாதே!’ என சபித்துவிட்டார். தாயின் சபதம் நிறைவேற – ஒரு விபச்சாரி ஜுரைஜிடம் வந்து தன் ஆசைக்கு இணங்கும்படி அழைக்கும்போது ஜுரைஜ் (விபச்சாரத்திற்கு) மறுத்துவிட்டார். அந்த விபச்சாரியோ ஒரு ஆடு மேய்ப்பவனிடம் உறவு கொண்டுவிட்டு ஒரு மகனையும் ஈன்றெடுத்தாள்.
மக்கள் ‘இக்குழந்தைக்குத் தகப்பன் யார்?’ எனக் கேட்க அந்த விபச்சாரியோ ஜுரைஜ் தான் இக்குழந்தைக்கு தகப்பன் என்று பதிலளிக்கிறாள். இறைவணக்கம் புரிவதாக ஜுரைஜ் ஏமாற்றுவதாக கருதிய மக்கள் அவரிடம் விசாரிக்க வருகின்றனர். அவர் தொழுது கொண்டிருக்கவே, கோபம் கொண்ட மக்கள் அவரது வணங்குமிடத்தை உடைத்தெறிந்து விட்டு, ‘இக்குழந்தையின் தந்தை நீதானே?’ எனக்கேட்க, அவர் அந்த சிறு குழந்தையிடம் சென்று ‘உனது தந்தை யார்?’ எனக் கேட்கிறார். அக்குழந்தை தனது தந்தை ஆடு மேய்ப்பவன் என பதில் அளிக்கிறது.
3. பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஒரு செவிலித்தாய் குழந்தைக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தபோது ஒரு அழகான வாலிபன் செல்கிறான். அதனைக் கண்ட அந்த பெண் ‘யா அல்லாஹ்! இக் குழந்தையை இந்த அழகிய வாலிபனைப் போல ஆக்குவாயாக!’ என பிரார்த்திக்கிறாள். இதைக் கேட்ட (பால் குடித்துக்கொண்டிருந்த) அக்குழந்தை மார்பிலிருந்து வாயை எடுத்து, ‘யா அல்லாஹ்! இவனைப் போன்று என்னை ஆக்கிவிடாதே!’ என கூறி விட்டு மீண்டும் பால் குடித்தது.
அடுத்து ஒரு அடிமைப்பெண் தவறு செய்ததாகவும், திருடியதாகவும் கூறி மக்கள் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். இதனைக்கண்ட (அந்த) செவிலித்தாய், ‘யா அல்லாஹ்! இக்குழந்தையை இவளைப்போன்று ஆக்கிவிடாதே!’ என வேண்டினாள். இதைக்கேட்ட அக்குழந்தை பால் குடிப்பதை நிறத்திவிட்டு, ‘யா அல்லாஹ்! என்னை இவளைப் போன்று ஆக்கி விடு!’ என பிரார்த்தித்தது.
இதன் காரணம் கேட்டபோது ‘முதலில் வந்த இளைஞன் கர்வம் பிடித்த கொடியவன். அடுத்து வந்தவள் குற்றம் கூறப்பட்டாலும் அக்குற்றங்களை செய்யாத நல்ல பெண்மணி அவள்’ என அக்குழந்தை பதிலளித்தது. (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
அல்லாஹ் நாடினால் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை மட்டுமல்ல தான் விரும்பும் எந்த குழந்தையையும் பேச வைக்க முடியும். ஆகவே தொட்டில் குழந்தை பேசுவது நபிமார்களுக்கு மட்டுமுள்ள அதிசயம் அல்ல.
இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் தொட்டில் குழந்தையாக இருந்தபோது பேசியதை இறைவனே திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். மற்றவர்கள் பேசியதை தனது இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலம் அறிவிக்கின்றான். அல்லாஹ் அறிவிக்காமல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதையும் தெரிவித்திருக்க முடியாது என்பது திருக்குர்ஆனின் 53:3 ஆம் வசனம் தெளிவு படுத்துகிறது.
பாரகல்லாஹ்
ReplyDelete