Header Ads



"ஒருமாத பெண் குழந்தையாக 33 ஆண்டுகளுக்கு முன் தத்தெடுக்கப்பட்டவர்"

-BBC-

இலங்கையில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி மடம் ஒன்றிலிருந்து 33 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளையின தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை, இப்போது வளர்ந்து ஆளாகி தனது அனுபவத்தை பிபிசியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

தாம் குடும்பமாக அம்மா அப்பாவுடன் வெளியே செல்லும் போது, வெள்ளையின பெற்றோருடன் ஆசிய இனத்தை சேர்ந்த பிள்ளை என மற்றையவர்கள் வினோதமாக பார்ப்பார்கள் என்றார் ஜெனி ஸ்மித்.

அவர்களது பார்வையில் பல கேள்விகள் இருப்பதை காணமுடியும் இங்கு அப்படித்தான் நடக்கிறது என்றார் அவர்.

பெற்றோர்களுடனான தமது உறவு குறித்து சமுதாயத்தில் தப்பாக பேசுவதும் கூட மிக வேதனை அளிப்பதாக உள்ளது, அவ்வாறான சந்தர்ப்பங்களை பல தடவைகள் நான் எதிர் கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆசிய சமுகத்தை சேர்ந்த பல நண்பர்களும் தனக்கு இருந்ததாக தெரிவித்த ஜெனி, அவர்கள் மத்தியில் தான் அடையாளத்தை தொலைத்த ஒருத்தியாகவே வளர்ந்ததாகவும் தெரிவித்தார்.

லண்டனிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரையோர நகரமான பிரைட்டனில் வளர்ந்த ஜெனி, தான் இனவாதம் மற்றும் அது பற்றிய அறியாமையையும் தானது வாழ் நாட்களில் அனுபவித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

''நான் நிறத்தை பார்ப்பதில்லை,உண்மையிலே அதைப்பற்றிக் கவலைப்பட்டதும் இல்லை,ஆனால் நான் எனது வளர்ப்பு பெற்றோருடன் இருக்கும் போது எங்களை பார்க்க வேடிக்கையாக இருக்கும்'' என்றார் அவர்.

பல்லினக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கு எதிரான மனப்பாங்கு மாற வேண்டும் என்பதுடன், மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.