Header Ads



புதிதாக 1000 மத்ரஸாக்களை உருவாக்க திட்டம் - அமைச்சர் ஹலீம்

-இக்பால் அலி-

கடந்த 20 வருடங்களுக்குப் பின் எமது சமூகத்திற்கு முஸ்லிம் சமயம் காலாசார அமைச்சு கிடைக்கப்பெற்றுள்ளது. எமது முஸ்லிம் சமயத்தின் கௌரவத்தையும் தனித்துவத்தை பாதுகாப்புவதற்காக புதிய அரசாங்கம் இந்த அமைச்சை எமக்கு வழங்கியுள்ளார்கள். எமது தேவைகளை சுயமாகவும் சுதந்திரமாகவும் நிறைவேற்றிக் கொள்வதற்கான   ஒரு நல்ல சந்தர்ப்பம் எமக்கு கிட்டியுள்ளது. இந்த அமைச்சு பிரிதொரு அமைச்சின் கீழ் இயங்கியதால் இது சரியான முறையில் கடந்த காலங்களில் செயற்படவில்லை. இந்தக் கால கட்டத்தில் எமது சமூகம் சார்ந்த விடயங்கள் ஏனைய சமூகத்தவர்கள் பார்த்து சிரிக்கும் வகையிலான முறையிலேயே அன்று  இருந்தது என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எமட் ஹலீம் தெரிவித்தார்.

பானகமுவ பெரிய பள்ளியின் தக்கிய மக்தப் கற்கை நெறியில் கல்வி பயிலும் மாணவர்களின் ஒரு வருடப் பூர்த்தி நிறைவை முன்னிட்டு பரிசளிப்பு விழா பானகமுவ அன் நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 20-03-2016 நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். எம் ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார் அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

இதுபோல கடந்த காலங்களில் பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும்  அடைந்த சமூகமாக நாங்கள் இருந்தோம். கடந்த காலங்களில் எமது பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன. பல இடையூறுகளை எமக்கு விளைவித்தார்கள்.  எமக்கு பிரச்சினைகள் எழுந்த நேரத்தில் நாங்கள் நீதி கேட்டு நீதி மன்றம் சென்றாலும் அங்கு முதன் முதலில் கேட்கப்பட்ட கேள்விதான் உங்களுடைய பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட்ட பள்ளி வாசல்களா என வினவுவார்கள். எமது பள்ளிவாசல்கள் பதிவு செய்யாமையினால் அன்று நாங்கள் தோல்வியைக் கண்டோம். நாங்கள் எதிர்பார்த்த நீதியை எங்களுக்கு பெற்றுக் கொள்ள முடிய வில்லை. . ஆகவே நான் அமைச்சைப் பொறுப்பேற்றவுடன் முதல் கட்டமாக தம் பள்ளிவாசல்களை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டேன். தற்போது கணிசமாளவு பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும் இன்னும் ஒரு சிலர் கவனத்தில் கொள்ளாமையிருப்பது கவலை தரும் விடயமாகும்.

இன்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினால் முன்னெடுப்படும் மக்தப் கல்வி நெறிப் பாடத் திட்டம் நாடாளாவிய ரீதியில் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதை நாம் எல்லோரும் அறிவோம். மக்தப் கல்வி முறையினால் எமது முஸ்லிம் பகுதிகளில் புதிய மாற்றங்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. நாம் கடந்த காலங்களில் குர்ஆனை ஓதுவதற்காக சிறிய குர்ஆன் மத்ரஸாக்களே காணப்பட்டன. அந்த கால கட்டத்தில் எமது மாணவர்கள் மத்ரஸாக் கல்வி கற்பதற்காக விருப்பமான மனோ நிலையில் செல்லவில்லை. மாறாக பலவந்தமாகவே கொண்டு விடப்பட்டனர். அந்த மத்ரஸாக்கள் ஒரு தோல்வி நான் கூறவில்லை. ஆயினும் அந்தக் காலகட்டத்திலே அந்த மத்ரஸாக்கள் குர்ஆனை ஓதக் கூடிய வாய்ப்பை எமக்கு ஊந்து சக்தியாக இருந்து ஏற்படுத்திக் கொடுத்தன. 

இன்னும் ஒரு படி மேலே சென்று அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் வேலைத் திட்டத்தின் கீழ்  எல்லாச் சிறார்களும் நன்மையளிக்கும் வகையில் சிறார்கள் மிகுந்த ஆர்வத்துடன் குர்ஆனை ஓதுவதற்காக மக்தப் கல்வியை ஆரம்பித்துள்ளார்கள்.. இந்த மக்தப் கல்வி முறையின் மூலம் எமது மாணவர்கள் 10 வயதுக்குள் மார்க்கத்திற்குரிய அடிப்படை மார்க்கக் கல்வி  அறிவை பெற்றுக் கொள்கின்றார்கள். அது மட்டுமல்ல அகீதா, பிக்குகள் போன்ற மார்க்க அறிவு, துஆக்கள், மனனம் செய்யும் மனப்பாங்கு , தேவையான சூறாக்களை அழகான முறையிலே அவர்கள் ஓதக் கூடிய பயற்சி அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த மக்தப் கல்வித் திட்டத்தினால் மேற்கொள்ளப்படும் சேவை பாராட்டத்தக்கதாகும்

குறிபாக நாடு பூராகவும் 3300 மக்தப் கற்கை மத்ரஸாக்கள் இயங்கி வருகின்றன. கடந்த வாரம் ஜம்மிய்யதுல் உலமா சபையுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது இன்னும் 1000 மக்தப் மத்ரஸாக்கள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக என தெரிவித்தார்கள். அதேபோல் இதில் சுமார்  ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்  கல்வி பயின்று வருகின்றனர். உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டிய நல்ல செய்தியாகும். 

இதேபோல் ஹஜ் விவகாரம் தொடர்பாக பொது மக்களுக்கு சிறந்த வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க பல்வேறு வகையான திட்டங்கள் வகுத்து செயற்படுத்தி வருகின்றோம். முஸ்லிம் மக்களுடைய நலன்களைப் பேணுவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. Nother joker..this government only saying. .nothing has done. .

    ReplyDelete

Powered by Blogger.