Header Ads



UNP களம் கொடுக்க, மைத்திரி ஆசி வழங்க, ராஜபக்சவினருக்கு எதிராக பொன்சேக்கா தாக்குதல்

ராஜபக்சவினருக்கு எதிராக நிலைப்பாடுகளை தாக்குதல் ரீதியான தளத்திற்கு கொண்டு வந்ததன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசியும் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த பாரதூரமான ஊழல், மோசடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக நாடாளுமன்றத்திற்குள் ராஜபக்சவினரை இலக்கு வைத்து விமர்சனங்களை முன்வைக்க பல அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயங்கி வரும் சூழலில், பொன்சேகாவின் நாடாளுமன்ற வருகையானது அரசியல் ரீதியாக முக்கியமானது என்பதுடன் நல்லாட்சிக்கும் பலத்தை சேர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா, சிங்கள ராவய, சிங்க லே போன்ற அமைப்புகள் ராஜபக்சவினரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வரும் நோக்கில், பாதுகாப்பு படையினரை தூண்டி விடுதல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த அமைப்புகளின் செயற்பாடுகளை சரியான முறையில் ஆராய்ந்துள்ள கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் புலனாய்வு பிரதானிகள், நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர போருக்கு தலைமை தாங்கிய முன்னாள் இராணுவ தளபதியை அரசாங்கத்தில் இணைத்து கொள்வது தொடர்பில் மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதில் எந்த சட்டரீதியான தடைகளும் இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை பொன்சேகா எதிர்வரும் 9 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், கோத்தபாய ராஜபக்ச மற்றும் கடந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான ஊழல், மோசடிகள், மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான இதுவரை வெளிவராத பல தகவல்களை நாடாளுமன்ற உரையில் வெளியிட உள்ளதாக ஜனநாயகக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்நேலியகொட காணாமல் போக செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இதுவரை வெளிவராத பல தகவல்களை பொன்சேகா தனது உரையில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் கூறியுள்ளார்.

1 comment:

  1. சபாஷ், சரியான போட்டி!

    ReplyDelete

Powered by Blogger.