Header Ads



சாய்ந்தமருது SLMC மத்திய குழுவில் பிளவு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளராக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஜலால்தீன் என்பவரே செயற்பட்டு வருகின்றார் எனவும் வேறு ஒரு நபர் போலியான கடிதத் தலைப்பில் கட்சிக் கிளை புனரமைப்பு தொடர்பில் கடிதங்களை அனுப்பியிருப்பது சட்ட விரோதமானது எனவும் அக்கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைத்துவத்தினாலும் உயர் பீடத்தினாலும் கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளராக 
நானே நியமிக்கப்பட்டு, கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றேன்.

கட்சி யாப்பின் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்சிக் கிளைகளை புனரமைக்கும் அதிகாரம் அமைப்பாளரான என்னைத் தவிர வேறு எவருக்கும் கிடையாது.

இந்நிலையிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளர் என்று தெரிவித்து- ஒரு நபர் போலியான கடிதத் தலைப்பில் கட்சிக் கிளைகளின் புனரமைப்புக்கு அழைப்பு விடுத்து கடிதங்களை அனுப்பியுள்ளார்.

ஆனால் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளராக முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஜலால்தீன் என்பவரே செயற்பட்டு வருகின்றார் என்பது கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் உயர் பீடத்தினருக்கு தெரிந்த விடயமாகும்.

ஆனால் அப்பதவிக்கு இன்னும் வேறு எவரும் தெரிவு செய்யப்படாத நிலையில் ஒரு நபர் போலியான கடிதத் தலைப்பில் தன்னை மத்திய குழுவின் செயலாளர் என்று அறிவித்திருப்பதை நான் நிராகரிப்பதுடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்சிக் கிளைகளை விரைவில் புனரமைப்பு செய்வதற்கான கடிதங்கள், கிளைகளின் அமைப்பாளர்களுக்கு என்னால் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பதை அறியத் தருகின்றேன்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளுமாறும் கிளைகளின் அமைப்பாளர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளர் என்று தெரிவித்துள்ள அந்த நபர், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடனும் உறவைப் பேணிக் கொண்டு தம்மை முஸ்லிம் காங்கிரசின் தீவிர செயற்பாட்டாளர் என்று காட்டிக் கொள்கிறார் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுகின்றேன்" என்று பிர்தௌஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.