புதிய கட்சியை ஆரம்பிக்கும் சகலரும் SLFP யிருந்து நீக்கப்படுவர் - துமிந்த திஸாநாயக்க
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து புதிய அரசியல்கட்சியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தகுதி தராதரம் பாராது கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இருந்து கொண்டு நாங்கள்தான் உண்மையான சுதந்திரக் கட்சியினர் எனக் கூறிக்கொண்டு, கட்சியை அழிக்கவும் வலுவற்றதாக்கவும் ஒரு சிறிய தரப்பினருக்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது.
இந்த சிறிய அணியினரது தீர்மானங்கள், செயற்பாடுகள் காரணமாக கட்சியின் தோற்றத்திற்கும் கட்சிக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்சியின் ஐக்கியத்தையும் தோற்றத்தை பாதுகாக்கவும், புதிய கட்சியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கும் சகலருக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நபருக்கு இரண்டு கட்சிகளில் இருக்க முடியாது. இதனால், புதிய கட்சியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்போர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க நினைப்பார்கள் என்றால், அது வெறும் கனவுதான்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தானாகவே இல்லாமல் போய்விடும்.” எனவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment