Header Ads



முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத்தர, ஒருபோதும் பின்னிற்க மாட்டோம் - லகீ ஜயவர்தன Mp சூளுரை

(நுஸ்கி முக்தார்)

கடந்த வருடம் ஜனவரி 08ஆம்  திகதி இந்த நாட்டு மக்கள் சேர்ந்து மேற்கொண்ட மாற்றத்தினால் இன்று இந்த நாட்டுக்கு சிறந்த ஒரு காலம் உருவாகியுள்ளது என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லகீ ஜயவர்தன தெரிவித்தார்.

உடுநுவரை, ஹந்தஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ் தலைமையில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் லகீ ஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், 

முஸ்லிம் மக்கள் இந்த சுதந்திரத்தை பெற மிகவும் தியாகத்துடன் செயற்பட்டமையை நான் நினைவூட்டுகின்றேன். நாடு இருந்த பாதகமான நிலைமையிலிருந்து பாதுகாக்க அதிகாமான பங்களிப்பு செய்தவர்களே இவர்கள். அதனால் உங்களது உரிமைகளை வென்றெடுக்க நாம் எந்த நேரமும் தயாராக உள்ளளோம். 

இந்த அரசு முன்னெடுத்துச் செல்லும் நல்ல செயற்பாடுகளை முறியடிக்க பெரும் பகுதியினர் செயற்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்களை கட்டுப்படுத்த எமக்கு அவகாசம் உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தற்பொழுது எதிர்கட்சியில் உள்ளனர். அதிகாரம் மாற்றப்பட்ட மன வேதனையால் அவ்வாறான நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. ஆனால் நாம் உருவாக்கிய இந்த சுதந்திரத்தை, இந்த அரசை எந்த விதத்திலும் வீழ்த்துவதற்கு இடமளிப்பதில்லை.

எமது கட்சியில் இனவாதம் இல்லை. சிங்களம், முஸ்லிம், தமிழ் ஆகிய அனைத்து இனங்களையும் சமமாக மதிக்கும் கட்சிதான் ஐக்கிய தேசிய கட்சி. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள உங்களை பாதுகாப்பது எமது பொறுப்பாகும். கடந்த காலங்களில் நடந்த அநீதியான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இந்த கட்சி செயற்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டால் தான் ஒரு நாடு முன்னேற்றம் அடையும். நல்லாட்சி அரசில் மக்களுக்கு எந்தவித வேறுபாடும் காட்டாமல் செயற்பட ஜனாதிபதி மற்றும் பிரதமர் என்றும் தயாராக உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விஸ்தரிப்பதற்கான அவசியம் உள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஜே.எம். ஹிஜாஸ் விடுத்த கோரிக்கையை ஏற்று அதனை விஸ்தரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு விசேட அவதானம் செலுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் லகீ ஜயவர்தன இதன் போது மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக தெநுவரை கல்வி வலய தமிழ் பிரிவு மேலதிக கல்வி பணிப்பாளர் சி.எம்.எம். மன்சூர் கலந்து கொண்டதுடன், விசேட அதிதிகளாக டர்ன் கீ (Turn Key) நிறுவன உரிமையாளர் இப்திகார் ரஹீம், ஒராயன் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் என்.எம்.எம். ஷபீக் மற்றும் பல்லேகம தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் எஸ்.டி.எம். டில்ஷாட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.