HIV வதந்தி, பிள்ளைகளை அனுப்பமறுக்கும் பெற்றோர் - வெறிச்சோடிய பாடசாலை (படங்கள்)
இலங்கையின் உள்ள ஒரு பாடசாலை ஒன்றில் படிக்கும் மாணவருக்கு எச் ஐ வி தொற்று உள்ளது எனும் வதந்தியால், அங்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
குருநாகல் மாவட்டம் குளியாபிட்டியிலுள்ள அந்தப் பள்ளிக்கூடத்திலேயே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிக்கூடத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஆறு வயது சிறுவன், எச்.ஐ.வி தொற்றினால் பாதிககப்பட்டுள்ளார் என பரவிய வதந்திகளையடுத்தே, பெற்றோர் தமது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதை தவிர்த்து வருகின்றனர் என அங்கு சென்றிருந்த பிபிசியின் பிரசாத் பூர்னிமால் ஜெயமான்ன கூறுகிறார்.
இந்த சிறுவனின் தந்தை நோய் காரணமான மரணமான நிலையில், அவர் எச்.ஐ.வி. தொற்றுக் காரணமானவே உயிரிழந்தார் என அந்த பிரதேசம் முழுவதிலும் வதந்தி பரவியது.
இதனால் அச்சிறுவனுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து அவரது தயார் போராடினார்.
இறுதியாக இந்த சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளால் சிறுவனை பள்ளியில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் இந்தச் சிறுவன் தமது பிள்ளைகளுடன் இருப்பதை விரும்பாத பெற்றோர் தமது பிள்ளைகளை அந்தப் பாடசாலைக்கு அனுப்ப மறுக்கின்றனர் எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
இதனால் மாணவர்கள் அற்ற நிலையில், அந்தப் பள்ளிக்கூடம் வெறிச்சோடி காணப்படுகிறது.
எதிர்வரும் புதன்கிழமை வரையில் தனது மகனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பள்ளியின் அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக அந்த சிறுவனின் தாயார் பிபிசியிடம் தெரிவித்தார்.
இதனிடையே சிறுவனுக்கு பள்ளியில் கிடைத்துள்ள அனுமதியை இரத்துச் செய்ய முடியாது என தெரிவித்த பள்ளிக்கூட நிர்வாகம் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே புதன்கிழமை வரை மாணவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனக் கோரியதாக தெரிவித்தது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் பள்ளிக் கூடத்திற்கும், சிறுவனின் வீட்டுக்கும் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
தமது பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மறுக்கும் பெற்றோரை சந்தித்த அதிகாரிகள், சிறுவனுக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என விளக்கமும் அளித்தனர்.
Post a Comment