"முஸ்லிம் கட்சிகளின், மாபெரும் தவறு"
-விடிவெள்ளி-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹுசைன் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே சந்திப்புகளை மேற்கொண்டதாகவும் குறித்த நிகழ்ச்சி நிரலில் முஸ்லிம் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் ஐ.நா. அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களையோ அல்லது வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் பிரதிநிதிகளையோ உத்தியோகபூர்வமாக சந்திக்கவில்லை எனும் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்த போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, ஹுசைன் இலங்கைக்கு வருகை தருவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னரே அவரது நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இக் காலப்பகுதியில் அவர் வடக்கு கிழக்கு முதலமைச்சர்களையும் கொழும்பில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை மாத்திரமே உத்தியோகபூர்வமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி நிரல் அனைத்தும் இலங்கை வெளிவிவகார அமைச்சினாலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் ஹுசைன் வருகை தருவதற்கு 10 நாட்களுக்கு முன்னரே முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளிடமிருந்து அவரைச் சந்திப்பதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும் ஏலவே அவரது நிகழ்ச்சி நிரல் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதால் புதிதாக நேரம் ஒதுக்க முடியாது என கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஹுசைன் கிழக்குக்கு விஜயம் செய்த சமயம் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமதைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது கிழக்கு மாகாணத்தின் பொதுவான விவகாரங்கள் குறித்தே பேசப்பட்டன.
இச் சந்திப்பின் பிற்பாடு திருகோணமலையில் சிவில் சமூக பிரதிநிதிகளை ஹுசைன் சந்தித்தார். இதில் பங்கேற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் முஸ்லிம் சமூகம் சார்பான கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தனர்.
அதேபோன்று வடக்குக்கு விஜயம் செய்த சமயம் வட மாகாண முதலமைச்சருடனான சந்திப்பு இடம்பெற்ற சமயம் வடக்கு முஸ்லிம்கள் சார்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கொழும்பில் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்த சமயம் அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதி ஒருவர் ஆணையாளர் ஹுசைனுடன் சில நிமிடங்கள் உரையாடியுள்ளார்.
எனினும் முஸ்லிம் கட்சிகள் ஒரு மாத காலத்திற்கு முன்னரே வெளிவிவகார அமைச்சின் ஊடாக ஹுசைனை சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பின் அம் முயற்சி வெற்றியளித்திருக்க வடும் என்றும் ஐ.நா. அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Bro. Subaideen, ஹுசைனால் பிரயோசனமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும் இங்குள்ள முஸ்லிம் கட்சிகள் சரியாக இயங்குகிறார்களா? என்பதை தான் இங்கு கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. பட்டம், பணம் பதவிகளுக்கு காட்டும் ஆர்வம் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் உரிமைகளையும் தீர்த்துக் கொள்வதற்கும் பெற்று கொள்வதற்கும் அர்பணிப்புடனும் தியாகத்துடனும் சேவை செய்கிறார்களா? என்பது கவனிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையாயின் அவர்கள் கண்டிக்கப்படவும் வேண்டும், தண்டிக்கப்படவும் வேண்டும்.
ReplyDelete