மைத்திரி + ரணிலின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி..!!
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இத்தருணத்தில் நாட்டின் இறைமை ஆள்புல எல்லையை பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிக்க வேண்டுமென ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் எமது 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாம் தேசத்தின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆள்புல எல்லையைப் பாதுகாப்பதிலும் தேசிய நல்லிணக்கம் மற்றும் எமது மக்களின் பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பலப்படுத்துவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்களையிட்டு பெருமைப்படுகிறோம்.
ஒரு வருடத்திற்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப, ஒரு நிலையான நல்லாட்சிக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்காக ஜனநாயகம், நல்லாட்சி, சட்டஆட்சி மற்றும் ஒரு அர்த்தமிக்க பாராளுமன்ற முறைமையினை ஏற்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இச் சூழ்நிலையில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றோம் என்றவகையில் இந்த நிகழ்வு விசேட முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. எமது எல்லா மக்களும் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஒரு சமூக, அரசியல் சூழலை உருவாக்கும் இப்பாதையில் தொடர்ந்தும் பயணிக்க நாம் உறுதியோடு உள்ளோம்.
இந்த அடைவுகளைத் தொடர்ந்து நாம் புதிய அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.
கடந்த காலத்தின் பலமான சமூக, கலாசார மரபுரிமைகளை ஆர்வத்துடன் பாதுகாத்து எதிர்கால வெற்றிகளை நோக்கி முன்னேறும் அதேநேரம், சுதேச அறிவையும் திறன்களையும் அபிவிருத்தி செய்வதிலேயே எமது சுதந்திரத்தின் பலம் பெரிதும் தங்கியுள்ளது என்பது எமது நம்பிக்கையாகும்.
இன்றைய தினம் சுதந்திரத்தின் அடைவுகளைக் கொண்டாடும் நாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் எமது இறைமையையும் ஆள்புல எல்லையையும் பாதுகாப்பதற்காக மிகப்பெரும் தியாகங்களைச் செய்த எமது பாதுகாப்புப் படையினருக்கு கௌரவத்தையும், மரியாதையையும் செலுத்துவது எமது கடப்பாடாகும்.
நீதி மற்றும் மானிடத்திற்கான அர்ப்பணத்துடனான எமது நடுநிலை வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச சமூகத்தில் எமக்கு பல நண்பர்களைப் பெற்றுத்தந்துள்ளது. சுபீட்சத்தை நோக்கிய எமது பயணத்தில் எமக்கு உதவ அவர்கள் தயாராகவுள்ளனர்.
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாம் எல்லோருக்கும் உண்மையான ஒழுக்கப்பண்பாடும் அறிவுபூர்வமானதும் சமத்துவமானதுமான சேவையை வழங்க எம்மை நாம் அர்ப்பணிப்போம்.
நாம் பெற்றுக்கொண்டுள்ள சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பேணிப் பாதுகாத்து நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்ததோர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப உறுதிகொள்வோம்.
ரணில் விக்கிரமசிங்க
இன, மத, கட்சி பேதமின்றி இலங்கை மக்கள் அனைவரோடும் கைகோத்து செயற்படுவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள 68ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
ஒழுக்கமான தேசமாக எமது நாட்டை உயர்த்தி 'ஒரே நாடு பாரிய பலம்' என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் ஐக்கியப்படுத்திய நிலையில், 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட கிடைத்தமையானது நாம் பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.
அவ்வாறு பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை, நிலையான மிகவும் அர்த்தபூர்வமான சுதந்திரமாக மாற்றிக்கொள்ளும் பொறுப்பு தற்போது நம் அனைவர் மீதும உள்ளது. அதற்காக வேண்டி இன, மத, கட்சி பேதமின்றி இலங்கை மக்கள் அனைவரோடும் கைகோத்து செயற்படுவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.
இங்கிலாந்தின் காலனித்துவத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து மக்கள் பிரிவினரையும் ஒன்றிணைத்து முன்நின்று செயற்பட்டதுபோன்று மக்களின் ஜனநாயக உரிமைகள், உரித்துடைமைகளை அடக்கி, ஒடுக்கி சர்வதேச ரீதியாக நாடு அபகீர்த்திக்கு உட்பட்டுக்கொண்டிருந்த இருண்ட காலப்பகுதியில் சர்வாதிகாரத்திலிருந்தும்,
குடும்ப நாட்டை மீட்டெடுக்க நாம் முன்நின்று செயற்பட்டோம். அதன் மிகச் சிறந்த பெறுபேறு கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.
மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சுதந்திரமான கௌரவம் மிக்க நாடாக எமது தனித்துவத்தை சர்வதேசத்தின் முன்னே நாம் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறோம். சட்டம், ஒழுங்கு மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாத்து, முன்னேற்றகரமான சமூக, பொருளாதார சூழலில் நாட்டைக் கட்டியெழுப்பும பாரிய பணி நம் முன்பே உள்ளது.
இந்த மொத்த செயற்பாட்டிலும் தமது வகிபாகத்தை ஒழுங்காக விளங்கி தேசத்தின் முன்னேற்றத்திற்காக உண்மையான பிரஜைகளாக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்
என்பதை இச்சுதந்திர தினத்தில் விசேடமாக மனதில் கொள்வோம்'' - என்றுள்ளது.
Post a Comment