Header Ads



"கருக்கலைப்பு பற்றி முடிவெடுக்கும், உரிமை பெண்களுக்கு வேண்டும்"

இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பில், கருக்கலைப்பு செய்து கொள்வது தொடர்பில் முடிவெடுப்பதை பெண்களின் உரிமையாக உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கிழக்கு மாகாணத்தில் பெண்களின் உரிமைகளுக்காக செயற்படும் அமைப்பான சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் கோருகின்றது.

புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மக்கள் கருத்துக்களை அறிவதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை தொடக்கம் மக்கள் கருத்தறியும் இந்த அமர்வு நடைபெற்றுவருகின்றது.

இலங்கையின் மொத்த சனத் தொகையில் 51 சத வீதமானவர்கள் பெண்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்ற சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினர், சகல துறைகளிலும் பெண்களுக்கு ஆகக் குறைந்தது 50 சத வீத ஓதுக்கீடு தேவை என்று கோரியுள்ளனர்.

பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் சட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படக் கூடாது என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

சட்டங்கள் மத- கலாசார பாகுபாடுகளுடன் தொடர்புடையதாக அமைதல் தவிர்க்கப்படல் வேண்டும் என்றும் எந்தவொரு பிரஜையும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவும் விவாகரத்து பெறவும் உரிமை இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

பாலியல் ரீதியான உரிமைகள், உடல்- உள ஆரோக்கியத்துக்கான உரிமை, கருக்கலைப்பு தொடர்பில் முடிவெடுக்கும் உரிமை போன்ற உரிமைகளுக்கு புதிதாக வரவுள்ள அரசியல் யாப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உரிய நேரத்தில் நீதியை பெற்றுக் கொடுக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற யோசனையையும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் அரசியல் யாப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழுவிடம் முன் வைத்துள்ளது.

No comments

Powered by Blogger.