ஹுசைனின் இலங்கை விஜயத்தின் பின், நிலவும் மர்ம மௌனம் - திவயின பத்திரிகை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின் மர்ம மௌனம் ஒன்று நிலவி வருவதாக திவயின பத்திரிகை செய்தி விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இதுவரை கடும் போக்கையே கடைப்பிடித்துள்ளது.
அதிலும் குறிப்பாக இளவரசர் செய்யித் ஹுசைன் ஆணையாளராக பதவியேற்றது முதல் இலங்கை தொடர்பில் கடுமையான கருத்துக்களையே வெளியிட்டு வந்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் கருத்துக்களை விட ஹுசைனின் கருத்துக்கள் கடுமையாக வெளியிடப்பட்டதும் உண்டு.
அந்த வகையில் இளவரசர் ஹுசைனின் இலங்கை விஜயம் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஜெனீவாவில் வீராவேசத்துடன் இலங்கை தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களை அவர் இங்கும் வெளியிடுவார் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் அவரது இலங்கை விஜயம் பல பாடங்களை அவருக்கு புகட்டியுள்ளதாக உணர முடிகின்றது.
மகாநாயக்கர்களுடனான சந்திப்பின் போது வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட போர்க்குற்ற விசாரணை நீதிமன்றக் கட்டமைப்பை இலங்கையில் நிறுவ முடியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்து கொண்டிருந்தார்.
அதன்காரணமாக அவரது சுருதி கொஞ்சம் தாழ்ந்திருந்தது. இலங்கை விஜயம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அதனை உணரமுடிந்தது,
எனினும் இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள் இந்த உண்மையை இதுவரை உணர்ந்து கொள்ளவில்லை. அவர்கள் மேற்கத்தேய நாடுகளைத் திருப்திப்படுத்துவதில் குறியாக இருக்கின்றார்கள்.
இதற்கிடையே மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் தனது சுருதியை குறைத்துக் கொண்டிருந்த போதிலும், இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இலங்கை விஜயம் தொடர்பான அவரது உத்தியோகபூர்வ அறிக்கை அதனையே சுட்டிக்காட்டுகின்றது.
எனினும் இலங்கை விஜயத்தின் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முக்கியஸ்தர்கள் மத்தியில் ஒரு மௌனப்போக்கை அவதானிக்க முடிகின்றது.
அது நல்லதற்கா அல்லது கெட்ட சகுனத்தின் அறிகுறியா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறித்த செய்தி விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment