சவுதி அரேபியாவில், இலங்கை பெண் மரணம் - கொன்றது யார்..?
தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் இலங்கை பணிப்பெண்களின் உயிர்கள் காவு கொள்ளப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், சவுதியில் உயிரிழந்த மாத்தளையைச் சேர்ந்த உதயகுமாரியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், உதயகுமாரியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாத்தளை – உக்குவெல – பரகாவெல பகுதியைச் சேர்ந்த 29 வயதான இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரி, 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார்.
உதயகுமாரியின் கணவரான தங்கராஜ் யோகராஜா, உதயகுமாரி செல்வதற்கு 15 நாட்களுக்கு முன்னர் சவுதிக்குச் சென்றுள்ளார்.
கணவன் – மனைவி ஆகிய இருவரும் ஒரே உரிமையாளரின் ஹோட்டல் மற்றும் வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.
எனினும், கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இரவு, 4 வயது பிள்ளையொன்றின் தாயான உதயகுமாரி உயிரிழந்ததாக அவரின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த விடயத்தை அறிந்து அதிர்ச்சியுற்ற உறவினர்கள், உதயகுமாரி எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் ஆராய்ந்த போது, அவரின் கணவரே அவரைக் கொலை செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.
கணவன் – மனைவிக்கு இடையே ஏற்கனவே முறுகல் நிலை காணப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான சவுதி தூதரகத்திடம் வினவியபோது, இந்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உதயகுமாரியின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவித்தனர்.
உயிரிழந்த உதயகுமாரியின் சடலத்தை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கணவர் ஒத்துழைக்கும் பட்சத்திலேயே நாட்டிற்கு சடலத்தை கொண்டுவர முடியும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
Post a Comment