"தமிழில் தேசிய கீதம்" வெற்றி தமிழ் பேசும் மக்களுக்கா..? அரசாங்கத்திற்கா..??
- என்.கண்ணன்-
கடந்த வியாழக்கிழமை நடந்த இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வின் இறுதியில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு சர்வதேச ஊடகங்களில் பெரியளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த அதிகாரபூர்வமற்ற தடை விலக்கப்பட்டது என்றும், தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு அரசாங்கம் அனுமதி என்றும், சர்வதேச ஊடகங்களில் காணப்பட்ட செய்தி, இலங்கை அரசாங்கம் தொடர்பான ஒரு புதிய கண்ணோட்டத்தை வெளியுலகில் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கிறது என்றே கூறலாம். 67 ஆண்டுகளுக்குப் பின்னர், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வு ஒன்றில், தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால், 67 ஆண்டு கால கறை ஒன்று அகற்றப்பட்டிருப்பதாகவே கருத வேண்டும்.
1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், 1949ஆம் அண்டு பெப்ரவரி 04ஆம் திகதி டொரிங்டன் சதுக்கத்தில் நடந்த முதலாவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளிலேயே தேசிய கீதம் பாடப்பட்டது. அன்று பிற்பகல் 4 மணிக்கு நடந்த சுதந்திர தின நிகழ்வில், முதலில் தமிழில் தான் தேசிய கீதம் பாடப்பட்டது, ஒன்றேகால் மணிநேரம் கழித்தே சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் கூறுகின்றன.
ஆனால், இம்முறை சுதந்திர தின நிகழ்வின் தொடக்கத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், நிகழ்வில் இறுதியில் தான் பாடப்பட்டது. எவ்வாறாயினும், இலங்கையின் சுதந்திர தின நிகழ்வொன்றில், தமிழில் தேசிய கீதம் மீண்டும் பாடப்பட்டது ஒரு வரலாற்றுப் பதிவாகியிருக்கிறது. அரச நிகழ்வுகளில், தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது, சிங்களத்தில் தான் பாடப்பட வேண்டும் என்று முன்னைய அரசாங்கம் ஒரு அதிகாரபூர்வமற்ற தடையை விதித்திருந்தது.
அந்த தடை ஏற்கனவே உடைக்கப்பட்டிருந்த போதிலும், இப்போது முறியடிக்கப்பட்டிருப்பது “67 ஆண்டு கால சாதனை“ யாகும். சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு, சிங்கள அடிப்படைவாத சக்திகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.
குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பிலவும், மகிந்த ராஜபக்சவும், தமிழில் தேசியகீதம் பாடப்படக் கூடாது என்று போர்க்கொடி உயர்த்தியிருந்தனர். சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டால், ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு வழி வகுக்கும் என்று கூட எச்சரித்திருந்தார் உதய கம்மன்பில.
அரசியலமைப்பின், 7ஆவது பிரிவு மற்றும் 83ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். ஏதாவது மாற்றங்கள் செய்வதாயின் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று 83 ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதனை மீறி, சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளதால் தான், ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரமுடியும் என்று அவர் கூறுகிறார். எவ்வாறாயினும், அப்படியானதொரு குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் பலம் உதய கம்மன்பிலவுக்கோ, அல்லது அவர் சார்ந்திருக்கும் அணிக்கோ கிடையாது.
அதுபோலவே, மகிந்த ராஜபக்சவும், தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை கடுமையாக எதிர்த்திருந்தார். நாளை உருது மொழியிலும், அரபு மொழியிலும் தேசிய கீதம் பாடுமாறு கேட்பார்கள் என்று முஸ்லிம்கள் மத்தியில் துவேசத்தையும் அவர் கிளப்பி விட்டிருக்கிறார்.
இந்தியாவில் பல மொழிகள் இருந்தும், ஒரே மொழியில் தான் தேசிய கீதம் பாடப்படுவதாக நியாயப்படுத்தியிருந்தார் மகிந்த ராஜபக்ச. ஆனால், இந்தியாவில் பெரும்பான்மையினர் பேசுகின்ற ஹிந்தி மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை, பெங்காலி மொழியில் தான் அது பாடப்படுகிறது.
அதேவேளை, உலகில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் பல்வேறு நாடுகளில் பாடப்படும் வரலாற்றையும் சிங்கள கடும்போக்குத் தலைமைகள் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. தென்னாபிரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, பிஜி,, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டதற்கு ஒரு பகுதி சிங்களத் தலைவர்கள் சாதகமான கருத்தைவே வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், நல்லிணக்கத்தை நோக்கி நகருகிறோம் என்று காட்டுவதற்கு இதனைப் பெரிதும் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது. நல்லிணக்கத்துக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அரசாங்கம், சர்வதேச சமூகத்துக்குத் தான், கணக்குக் காட்ட வேண்டியிருக்கிறது. அதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால் இது தமிழ் மக்களுக்கு எந்தளவுக்கு பயனுள்ள விடயமாக இருக்கும் என்ற கேள்வி பரவலாக இருப்பதை மறுக்க முடியாது. இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளாக பங்கேற்று வரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழில் தேசி்ய கீதம் பாடப்பட்டது ஒன்றும் புதியதோ, ஆச்சரியப்பட வேண்டிய விடயமோ அல்ல. ஏனெனில் தேசிய கீதம் ஏற்கனவே சுதந்திர தினத்தில் தமிழில் பாடப்பட்டு வந்த ஒன்று தான்.
இது பெரிய விடயமல்ல. எனினும் இதனை மீள் நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கத்திற்கும் நன்மை இருக்கிறது. அதேபோன்று மக்களுக்கும் நல்லதுதான். எனினும் தமிழ் மக்கள் பிறர் தயவில் வாழ வேணடியவர்களல்ல” என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். தமிழில் தேசிய கீதம் பாடடப்பட்ட போது சம்பந்தன் நெகிழ்ச்சியில் கண்கலங்கியதாக, நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ஒருவரை ஆதாரம் காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனாலும், தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது குறித்து இரா.சம்பந்தன் வெளிப்படுத்தியுள்ள கருத்து, இன்னும் செய்ய வேண்டிய நிறைய விடயங்கள் இருப்பதைத் தான் சுட்டிக்காட்டியிருக்கிறது. தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு விட்டதால், தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விட்டதாக வெளியுலகம் நம்ப வைக்கப்படலாம். ஆனால், உள்நாட்டில் மக்கள் அவ்வாறான ஒரு நிலையில் இல்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், தேசிய கீதம் தமிழில் பாடுவதா, சிங்களத்தில் பாடுவதா என்ற விவாதங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.
தமிழர்களைப் பொறுத்தவரையில், தமக்கான அங்கீகாரம், தமக்கான உரிமைகள், மீது தான் கவனம் செலுத்துகின்றனர். ஆண்டில் ஒரு நாள் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில், தமிழில் தேசிய கீதம் பாடி விட்டோம் என்று தமிழர்கள் எண்ணி எண்ணிக் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க முடியாது. தமிழர்களின் தேவைகள், அபிலாசைகளை நிறைவேற்றப்படும் போது தான், தமிழர்களால் இந்த நாட்டில் தாமும் ஒரு அங்கம் என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்வார்கள்.
அத்தகையதொரு நிலையை நோக்கி, இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் முன்னகர்த்தப்படவில்லை. நல்லிணக்க முயற்சிகளை இரண்டு வகைப்படுத்திக் கூறலாம். ஒன்று அரசாங்கத்துக்கு நன்மையளிக்கக் கூடியது. இரண்டாவது சிறுபான்மையின மக்களுக்கு நன்மையளிக்கக் கூடியது. சர்வதேச அரங்கில் அரசாங்கத்துக்கு நன்மை- பெயரைத் தேடித்தரக் கூடிய விடயங்கள், அரசாங்கத்துக்கான அழுத்தங்களைக் குறைக்கும். தமிழில் தேசிய கீதம் பாட அனுமதிக்கப்பட்டமையும் அவ்வாறான ஒன்று தான்.
தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு அனுமதிக்கவில்லையே என்பதற்காக தமிழர்கள் போராட்டம் நடத்தவில்லை. தமிழர்களின் போராட்டம் அதற்கானதும் அல்ல. தமக்கான சுதந்திரம், உரிமைகளுக்காகவே தமிழர்கள், பல தசாப்தங்களாகப் போராடி வருகின்றனர். எனவே, சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த அரசாங்கத்துக்கு கைகொடுக்கக்கூடிய எத்தகைய நல்லிணக்க முயற்சியும், தமிழர்களைப் பொறுத்தவரையில் யானைப் பசிக்கு சோளப் பொரி கொடுத்தது போலத் தான் அமையும்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்க்கும் வகையில், அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்குகின்ற ஒரு சூழல் எப்போது உருவாகிறதோ அப்போது தான், இலங்கையின் சுதந்திர தினத்துடன் தமிழர்களால் இயல்பாக ஒன்றிணைய முடியும். இல்லாவிட்டால், ஒருபக்கத்தில் தமிழில் தேசிய கீதம் இசைத்து சுதந்திர தினம் கொண்டடாடப்படுவதும், இன்னொரு பக்கம் அதனை கறுப்பு நாளாக அனுசரிப்பதும் தொடர்கதையாகவே நீளும்.
அதேவேளை, தமிழர்களால் பலகாலமாக நிராகரிக்கப்பட்டு வந்த இலங்கையின் தேசிய கீதத்தை, ஏற்றுக்கொள்ள வைத்து, அவர்களின் மொழியிலேயே பாட வைப்பதில் இந்த அரசாங்கம் வெற்றி கண்டிருக்கிறது. பாடப்பட்ட மொழி வேறானாலும், கருத்து ஒன்று தான், அந்த வகையில் பார்த்தால், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது, தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட, அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றி என்று தான் கூற வேண்டும்.
சம்பந்தன் ஐயா,
ReplyDeleteஉங்கள் கண்கள் பனித்தன.. காதுமுடிகள் புல்லரித்தன.. என்றெல்லாம் கற்பனைகளை நிஜமாக்கி ஜென்டிமென்ட் ஸீன் க்ரியேட் பண்ணினார்கள் மீடியாக்கள். அத்தனையையும் உங்கள் புருவநெரிப்பில் சுட்டுப்போட்டு இன்னும் 'நான் ஸ்மார்ட்தான்!' என்று நிரூபித்திருக்கிறீர்கள், ஐயா!
இந்தப்பக்கம் வந்தால் எங்களுடைய கோட்சூட் அரசியல்வியாதிகளுக்கும் கொஞ்சம் டியூஷன் எடுக்க மாட்டீர்களா..?