Header Ads



முஸ்லிம்கள் தொடர்பில், மகிந்தவின் இரட்டை வேடம்

உள்நாட்டு யுத்தம் 2009 ம் ஆண்டு மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பேரினவாதத்தின் பிரதான இலக்காக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களாவர்.

முப்பது வருட கால யுத்தம் முள்ளிவாய்க்காலுடன் முடிவடைந்து போன பின்னர் தமிழர்களை நசுக்குவதற்கென்று அவர்களிடம் எதுவித பலமுமே இருக்கவில்லை.

வாழ்விடத்தையும் பொருளாதாரத்தையும் இழந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாகச் சிதறுண்டு போன தமிழர்களை அதற்கும் மேலாக நசுக்குவதற்கான அவசியம் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும் அப்பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை பலவந்தமாக ஏற்படுத்துவதிலுமே முன்னைய அரசாங்கம் முனைப்புக் காட்டியது. தமிழ் இனத்தை முற்றுமுழுதாக நசுக்குவதே அன்றைய அரசாங்கத்தின் திட்டமென்பது யுத்த முடிவுக்குப் பின்னரேயே வெளிப்படையாகத் தெரியவந்தது.

புலிகளின் அழிவுடன் தமிழினத்தின் பலமும் அடக்கப்பட்டு விட்டதென்ற எண்ணத்துடனேயே, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்குவதன் மூலம் அச்சமூகத்தையும் அடக்கி விடலாமென அன்றைய ஆட்சியின் போது பேரினவாதிகள் திட்டமிட்டிருந்தனர்.

முஸ்லிம்களின் மத அடையாளங்களையும் வியாபாரத்தையும் இலக்கு வைக்கும் நோக்குடனேயே பௌத்த இனவாத அமைப்புகள் முன்னைய ஆட்சியின் போது தோற்றுவிக்கப்பட்டன.

இவ்வாறான அமைப்புகளை உருவாக்குவதிலும், அவற்றைப் பேணி வளர்ப்பதிலும் முன்னைய ஆட்சியின் போது அனுசரணையும் ஆதரவும் வழங்கியவர்கள் யாரென்பதெல்லாம் முஸ்லிம்களுக்குத் தெரியாத செய்திகளல்ல.

முஸ்லிம்களின் வணக்கத் தலங்கள் பட்டப்பகலில் தாக்கப்பட்டன. பௌத்த மத குருமார்களாகவுள்ள பேரினவாதிகள் பலர் முஸ்லிம்களின் வணக்கத் தலங்களுக்குள் புகுந்து சென்று குழப்பம் விளைவித்தனர். முஸ்லிம்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகளென பேரினவாதிகள் மேடை போட்டுப் பிரசாரம் செய்தனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் ‘கிறீஸ் பூதங்கள்’ என்பதன் பேரில் முஸ்லிம்களின் குடிமனைகளுக்குள் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் புகுந்து பயமுறுத்தினர்.

முஸ்லிம்களை உளவியல் ரீதியில் அச்சுறுத்துவதுடன், முஸ்லிம்கள் தரப்பில் ஆயுதங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதற்கான தந்திரமே இதுவென பின்னர் தகவல்கள் வெளிவந்தன.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில கடைகள் பலவந்தத்தின் பேரில் குறைந்த விலையில் சிங்களவர்களுக்கு விற்கப்பட்ட காரியமும் நகர்ப் பகுதிகளில் அந்நாட்களில் நடந்த அநீதியாகும்.

முஸ்லிம் ஆண்களும் பெண்களும் தங்களது மத கலாசார, பாரம்பரியத்துக்குரிய ஆடைகளை அணிந்து அச்சமின்றி நடமாட முடியாத காலப் பகுதியொன்று அன்று இருந்தது.

முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையின் உச்சக்கட்டமாகவே அளுத்கம, பேருவளை, தர்காநகர் வன்செயல்களைக் குறிப்பிட முடியும். முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் பட்டப் பகலில் உடைத்தும், தீ வைக்கப்பட்டும். கொள்ளையிடப்பட்டும் பெரும் காட்டுத் தர்பார் நடத்தப்பட்டதை முஸ்லிம்கள் எக்காலமும் மறந்து விட முடியாது.

இலங்கையின் குற்றவியல் சட்ட ஏற்பாடுகள் மிகவும் வலுவானவையாகும். கலவரத்தில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறையைத் தூண்டுவோரைக் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரங்கள் உள்ளன.

ஆனாலும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதோ, முஸ்லிம்கள் அச்சுறுத்தப்பட்ட போதோ, அளுத்கமை பிரதேசம் தீப்பற்றி எரிந்த போதோ சட்டத்தினால் தனது கடமையை சற்றேனும் ஆற்ற முடியாமல் போனதுதான் விசித்திரமானது.

இந்நாட்டில் பெரும்பான்மையினருக்கும் சிறுபான்மையினருக்குமென்று வெவ்வேறு சட்டங்கள் உள்ளதோ என்ற சந்தேகம் தோன்றியதும் அவ்வேளையில்தான்.

சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்த போதெல்லாம் பேரினவாதிகளின் கைகள் ஓங்கியதையே முன்னைய ஆட்சியில் காண முடிந்தது.

அத்தனை காட்சிகளையும் கண்டும் காணாதவர்கள் போன்று முன்னைய ஆட்சியின் தலைவர்கள் மௌனித்து இருந்ததை சிறுபான்மையினர் வேதனையுடன் நோக்கினர்.

பேரினவாத பலத்தை எதிர்த்துப் போராடும் திராணி முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருக்கு அன்றைய அரசுடன் ஒட்டியிருக்க வேண்டிய தேவை இருந்ததால் சிறுபான்மையினருக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுப்பது அன்றைய அரசுக்கு வசதியாகவும் இருந்தது.

இத்தனை களேபரங்கள் நடந்த வேளையில் அன்றைய ஆட்சியாளர்கள் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்தனர். முஸ்லிம்கள் மத்தியில் பேசும் போது ஐக்கியத்தையும், சிங்கள மக்கள் மத்தியில் பேசும் போது இனவாதத்தையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

‘பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும்’ இந்த இரட்டை வேடம் முஸ்லிம்களுக்குத் தெரியாததும் அல்ல.

இவையெல்லாம் அன்றைய ஆட்சியின் போது நடந்து முடிந்த கொடுமைகள்....

இது ஒருபுறமிருக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த சனிக்கிழமையன்று மல்வானையில் முஸ்லிம்கள் மத்தியில் பேசும் போது முக்கியமான கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.

அன்றைய காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்கு தான் பொறுப்பு அல்ல என்று மஹிந்த கூறியுள்ளார்.

அதேசமயம் தன்னிடமிருந்து முஸ்லிம்களைப் பிரிப்பதற்கான சதியே அதுவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவர் அதிகாரத்திலிருந்த வேளையில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது அடக்குமுறையும் வன்செயல்களும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

அவற்றைத் தடுக்க அக்காலப் பகுதியில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டிருந்த அன்றைய ஆட்சித் தலைவரோ அச்சம்பவங்களுக்கு தான் பொறுப்பாளியல்ல எனக் கூறுகிறார்.

முஸ்லிம்களைப் பொறுத்த வரை மஹிந்தவின் வார்த்தைகள் வேடிக்கையாக நோக்கப்பட வேண்டியவையாகும்.

அரசியல்வாதிகள் அரசியலுக்காக எதுவும் பேசுவர் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

No comments

Powered by Blogger.