Header Ads



துருக்கி அரசாங்கத்திற்கு, ஹக்கீம் நன்றி தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விஷேட தூதுவராக துருக்கி நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நகர திட்மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், இலங்கையில் சுனாமி அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நாட்டின் வடபகுதியில் இடம்பெயர்ந்து, மீளக்குடியேறும் மக்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு துருக்கி அரசாங்கம் நடவடிக்கையெடுத்துவருவதையிட்டு தமது அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். 

துருக்கிய தேசிய மக்கள் பேரவை (பாராளுமன்றம்) மற்றும் பாராளுமன்றங்களுக்கிடையிலான நட்புறவு ஒன்றியத்தின் பிரதிநிதிகளான முகஹுட் டுமசொக்லு மற்றும் முஸ்தபா சேர்டெங்கெக்டி ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் ஹக்கீம் இது பற்றிக் கூறினார்.

இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் சிறப்பாக கட்டியெழுப்புவதே அமைச்சர் ஹக்கீமின் துருக்கி விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.

அத்துடன், யுத்தத்தின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் அகதிகளுக்கு அனுப்பி வைப்பதற்காக துருக்கிக்கு இலங்கை அரசாங்கத்தின் அன்பளிப்பாக பெருந்தொகை தேயிலை மற்றும் அரிசி என்பன வழங்கப்படுவதாகவும் அமைச்சர் ஹக்கீம் அங்கு தெரிவித்தார்.

மத்தல சர்வதேச விமான நிலையத்தை துருக்கி விமான சேவையின் பராமரிப்பு மையமாக பயன்படுத்துவ பற்றியும் ஆராயப்பட்டது. அதற்கான பேச்சு வார்த்தையொன்றிலும் அமைச்சர் ஹக்கீமும் துருக்கிய விமான சேவையின் பிரதித் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி டேமேல் கொட்டில் மற்றும் உயரதிகாரிகள் ஆகியோர் ஈடுபட்டனர்.

துருக்கியர் விரும்பி பருகும் இலங்கை தேயிலையை அந்நாட்டில் மேலும் பிரபல்யப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றியும் இருநாடுகளுக்குமிடையில் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும் அந்நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஹக்கீம் பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தினார்.

துருக்கிய எக்ஸிம் வங்கியின் உயரதிகாரிகளுடனும் அமைச்சர் ஹக்கீம் முக்கிய சந்திப்பொன்றை நடத்தினார். துருக்கியின் இலங்கை தூதரகத்தில் அந்நாட்டுக்கான தூதுவர் பீ.எம்.எம்.அம்ஸா ஏற்பாடு செய்திருந்த 68ஆவது சுதந்திர தின நிகழ்விலும் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதிகயாகக் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜெம்சாத் இக்பால்

No comments

Powered by Blogger.